சென்னை வரும் பிரதமர் மோடி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பிரதமர் மோடி சென்னையில் இருந்து புதுச்சேரி புறப்பட்டு செல்லும் வரை விமான நிலையம் அருகே ட்ரோன் கேமராக்கள் பறக்க அனுமதிக்கக் கூடாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Published : February 26, 2026 at 7:49 AM IST
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி வரும் 28ஆம் தேதி சென்னை வருவதையொட்டி சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மற்ற துறை அதிகாரிகளுடன் சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆலோசனை மேற்கொண்டனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, இரு மாநிலங்களிலும் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், வரும் மார்ச் 1ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக வரும் 28ஆம் தேதி இரவு 8:45 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அவர் சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். சென்னைக்கு வருகை புரியும் பிரதமருக்கு பாஜக, அதிமுக கூட்டணிக் கட்சியினர் விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கவுள்ளனர்.
அந்த வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மோடி சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று, அன்றிரவு அங்கு தங்குகிறார். இதையடுத்து, மார்ச் 1ஆம் தேதி காலை 10:45 மணியளவில் சென்னை பழைய விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் புதுச்சேரி புறப்பட்டு செல்கிறார்.
இன்னும் 2 நாட்களில் பிரதமர் சென்னைக்கு வருகை புரிவதை ஒட்டி, டெல்லியில் உள்ள பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை குழுவினர் நேற்று (பிப். 25) சென்னை விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சிறப்பு பாதுகாப்பு படை குழுவினர், தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், விமான நிலைய உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டனர்.
மேலும், பிரதமர் மோடி சென்னையில் இருந்து புதுச்சேரி புறப்பட்டு செல்லும் வரை, விமான நிலையம் அருகே ட்ரோன் கேமராக்கள் பறக்க அனுமதிக்கக் கூடாது என்பது குறித்தும், பிரதமரை சந்திக்க மற்றும் வரவேற்பு அளிக்க வருபவர்கள் பட்டியல் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

