ETV Bharat / state

'அடிப்படை ஊதியத்தில் முரண்பாடு உள்ளதால் ஓய்வூதியத்திலும் முரண்பாடு இருக்கும்' - இடைநிலை ஆசிரியர்கள் கருத்து

அரசு அழைத்துப் பேசி எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராடுவோம் என இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 4, 2026 at 4:14 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: அடிப்படை ஊதியத்தில் முரண்பாடு உள்ளதால் ஓய்வூதியத்திலும் முரண்பாடு இருக்கும் என இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊதிய முரண்பாட்டை களைய கோரி இடைநிலை ஆசிரியர்கள் 10 வது நாளாக சென்னை, சிவானந்தா சாலையில் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர்.

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை ஆசிரியர்கள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பை சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 26 ஆம் தேதி முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வருகிறது. நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் இன்று பத்தாவது நாளாக சிவானந்தா சாலையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பிறகு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராபர்ட் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ''சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தி நடத்தினோம். திமுக தேர்தல் வாக்குறுதி 311 நிறைவேற்றவில்லை என்றால் பள்ளி திறந்த பிறகும் போராட்டம் நீடிக்கும்.

நாளை முதல் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்துவோம். ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்ல மாட்டோம். அரசு அழைத்துப் பேசி எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராடுவோம். 8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட டிப்ளமோ படித்த எங்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குகின்றனர்.

சங்கத்தின் பொதுச் செயலாளர் ராபர்ட்
சங்கத்தின் பொதுச் செயலாளர் ராபர்ட் (ETV Bharat Tamil Nadu)

அரசு எங்களை அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர்கள் 12 நாட்களாக மாணவர்களை பார்க்காமல் உள்ளோம். நாளை பள்ளிகள் திறந்தவுடன் எங்கள் மாணவர்களை பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறோம். அரசு எங்களை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும்.

எங்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கொடுக்காவிட்டாலும் 7 அல்லது 8 ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பள்ளிகள் திறந்தாலும் நாங்கள் மாவட்ட அளவில் போராட்டங்களை தொடர்வோம். எங்களுக்கு ஆதரவாக பெற்றோர்களும் போராட்டத்திற்கு வருவார்கள்.

போராட்ட களத்தில் பாடம் படிக்கும் மாணவன்
போராட்ட களத்தில் பாடம் படிக்கும் மாணவன் (ETV Bharat Tamil Nadu)
இதையும் படிங்க: ஓய்வூதிய திட்டம்; மக்களும், அரசு அதிகாரிகளும் ஏமாளிகளா? - நயினார் நாகேந்திரன்

தற்போது முதலமைச்சர் அறிவித்திருக்கும் ஓய்வூதியத் திட்டத்தை நாங்கள் நன்றியுடன் வரவேற்கிறோம். ஆனால், அதே நேரத்தில் எங்களுக்கு அடிப்படை ஊதியத்தில் முரண்பாடு உள்ளதால் ஓய்வூதியத்தில் முரண்பாடு இருக்கும். எனவே அடிப்படை ஊதியத்தை முறையாக உயர்த்த வேண்டும்'' என வலியுறுத்தினார்.