சம வேலைக்கு சம ஊதியம்; போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு
பள்ளிகள் திறந்தும் நாங்கள் பணிக்கு செல்லாமல் இருப்பது வருத்தமாக உள்ளதாக இடைநிலை ஆசிரியர் இயக்கம் தெரிவித்துள்ளது.

Published : January 5, 2026 at 8:39 PM IST
சென்னை: 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை நிறைவேற்ற பள்ளிக்கல்வித் துறையுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் தங்களது போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பின் நியமிக்கப்பட்ட 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கை 311 இல் வாக்குறுதி அளித்து இருந்தது. இந்நிலையில், நான்கரை ஆண்டுகளாகியும் இதுவரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பை சரி செய்ய வேண்டுமென வலியுறுத்தி, கடந்த டிச.26 ஆம் தேதி முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இன்று 11 வது நாளாக சென்னை காந்தி இர்வின் சாலையில் இடைநிலை ஆசிரியர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், இடைநிலை பதிவு மற்றும் ஆசிரியர் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் உள்ளிட்ட இயக்க நிர்வாகிகளுடன் இன்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராபர்ட், '' கடந்த டிச.26 ஆம் தேதி முதல் சென்னையில் அகிம்சை வழியிலான போராட்டத்தை முன்னெடுத்து நடத்தினோம். அதன் அடிப்படையில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி எங்களது கருத்துக்களை கேட்டறிந்தார். மற்ற மாநிலங்களில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் எப்படி இருக்கிறது, தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் எப்படி இருக்கிறது என்பது குறித்து விளக்கினோம். இதை தீர்வு காண என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விவரத்தை ஆதாரங்களோடு இயக்குரிடம் முன் வைத்தோம்.
பேச்சுவார்த்தை சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. ஓரிரு நாட்களில் பிரச்சினை முடிவடையும். தீவிர போராட்டமாக இல்லாமல் எங்களது போராட்டம் தொடரும். எங்களது கோரிக்கையை வலியுறுத்தி டிபிஐ வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம். சமுதாயத்தை மாற்றக்கூடிய ஆசிரியர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கையை எடுக்கக் கூடாது.
மற்ற மாநிலங்களை போல இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை எங்களுக்கு மாற்றி வழங்க வேண்டும், அது வரை எங்களது போராட்டம் தொடரும் என பேச்சு வார்த்தையில் தெரிவித்துள்ளோம். நிச்சயமாக ஓரிரு நாட்களில் முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம். முடிவு வரும் வரை களத்தில் தொடர்ந்து போராடுவோம். பள்ளிகள் திறந்தும் பணிக்கு செல்லாததால் நாங்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளோம். வேலைக்கு செல்லாததற்கு பள்ளி குழந்தைகளிடமும், பெற்றோரிடமும் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.'' என கூறினார்.

