ETV Bharat / state

இபிஎஸ் தலைமையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை... மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உட்பட என்டிஏ கட்சிகள் பங்கேற்பு

மதுரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பாஜக சார்பில் மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் கலந்துகொண்டுள்ளார்.

இபிஎஸ் தலைமையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
இபிஎஸ் தலைமையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 1, 2026 at 9:45 PM IST

1 Min Read
Choose ETV Bharat

மதுரை: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கினார்.

தமிழ்நாட்டில் இன்னும் வெகு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இருநாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி, மதுரையில் இன்று நடைபெற்ற என்டிஏ பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், '' திமுக ஏழைகளுக்கு வேலை செய்யவில்லை.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. வரும் தேர்தல் தமிழக அரசியலில் திருப்புமுனையாக அமையும். திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்.'' என மக்கள் மத்தியில் ஆவேசமாக பேசினார். அதே போல, தே.ஜ.கூட்டணியின் தமிழ்நாடு தலைவர் இபிஎஸ், கூட்டணி கட்சி தலைவர்கள் டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரும் திமுக அரசை கடுமையாகி சாடி பேசினர்.

இபிஎஸ் தலைமையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
இபிஎஸ் தலைமையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை (ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், பொதுக் கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் என்டிஏ கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மதுரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பாஜக சார்பில் மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் கலந்துகொண்டுள்ளார்.

அதே போல, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக தேசிய இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், இந்திய ஜனநாயக சங்கத் தலைவர் ரவி பச்சமுத்து, புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி, அகில இந்திய பாரத் பிளாக் கட்சியினுடைய தலைவர் திருமாறன் ஜி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும், தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் முதன்முறையாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், கூட்டத்தில் எடுக்கப்படவுள்ள முடிவுகள் குறித்து அரசியல் களத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: தே.க கூட்டணி ஆட்சிக்கு வந்தால் போதைப்பொருள் மாஃபியாக்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் - மதுரையில் பிரதமர் மோடி உறுதி