ETV Bharat / state

பள்ளிகளில் ஆய்வு- வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை

அரசியல் விளம்பர நோக்கங்களுக்காக ரீல்ஸ் மற்றும் வீடியோக்களை எடுக்க பள்ளி வளாகம், வகுப்பறைகள், மாணவர்கள் அல்லது ஆசிரியர்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Etv Bharatபள்ளிகளில் ஆய்வு- வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை
பள்ளிகளில் ஆய்வு- வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 7, 2026 at 11:02 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில், முக்கிய பிரமுகர்கள் ஆய்வு மேற்கொள்ளப்படுவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அமைச்சர் ராஜ்மோகனுக்கு அந்த அமைப்பு அனுப்பியுள்ள கடிதத்தில், "மக்கள் பிரதிநிதிகள், பள்ளிக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தப்படும் விதம் ஆழ்ந்த கவலையை அளிக்கிறது.

குறிப்பாக, சிவகாசியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் தொழில் துறை அமைச்சர் எஸ்.கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில், கேமரா முன்பு மாணவர்களிடம் அமைச்சர் கேள்வி கேட்டதையும், குழந்தைகளின் பதில்களை வைத்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் பொதுவெளியில் விமர்சிப்பதையும் காண முடிந்தது.

இதையும் படிங்க.. ஆய்வுக்கு சென்ற இடத்தில் மது குடித்துவிட்டு அலப்பறை; கூட்டுறவு வங்கி உதவி மேலாளர் பணியிடை நீக்கம்

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பார்வையிடுவதை தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் முழுமையாக ஆதரிக்கிறது. அப்போதுதான், பள்ளிகளில் உள்ள பிரச்சனைகள், சவால்களை புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், கேமரா, அதிகாரிகள் மற்றும் மக்கள் கூட்டத்திற்கு நடுவே, அறிமுகமில்லாத முக்கிய பிரமுகர்கள் எதிர்பாராதவிதமாக கேள்விகள் கேட்கும்போது ​குழந்தைகள் நம்பிக்கையுடன் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்கள் பதில் அளிக்கத் தயங்குவதை வைத்து ஆசிரியர் நன்றாக கற்பிக்கவில்லை என்ற முடிவுக்கும் வந்துவிட முடியாது. இத்தகைய சூழலில் பொதுவெளியில் கேள்விகள் கேட்பது, குழந்தைகளின் தன்னம்பிக்கை, சுயமரியாதை மற்றும் உணர்வுப்பூர்வமான நல்வாழ்வு ஆகியவற்றைப் பாதிக்கும் வாய்ப்புள்ளது.

முக்கிய பிரமுகர்களின் வருகை, பெற்றோர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகவும், ஆசிரியர்களை ஊக்குவிப்பதாகவும், குழந்தைகளுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் இருக்க வேண்டும்.

எனவே, அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரபலங்கள் கல்வி நிறுவனங்களுக்கு மேற்கொள்ளும் வருகைகளை முறைப்படுத்தும் வகையில், தெளிவான கல்விசார் நோக்கங்கள் மற்றும் நெறிமுறைகளுடன் கூடிய விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்.

முக்கிய பிரமுகர்களின் ஆய்வின்போது, மாணவர்களையும் ஆசிரியர்களையும் பொதுவெளியில் கேள்விக்குள்ளாக்குவது, கேலி செய்வது அல்லது அவமானப்படுத்துவது ஆகியவற்றைத் தடை செய்ய வேண்டும்.

இதுகுறித்து, குழந்தைகள் உரிமை நிபுணர்கள், கல்வியாளர்கள், உளவியலாளர்கள் மற்றும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகியோருடன் கலந்தாலோசித்து, அதிகாரப்பூர்வ வருகைகளுக்கான நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.

இதையும் படிங்க.. நாம் ஒன்றும் பலவீனமான மாநிலம் அல்ல - நீர்நிலை ஆக்கிரமிப்பு வழக்கில் நீதிபதிகள் கருத்து

பள்ளிகளில் ஆய்வு செய்யும் மக்கள் பிரதிநிதிகள், குழந்தைகளின் கண்ணியம், தனியுரிமை மற்றும் உணர்வுப்பூர்வமான நல்வாழ்வு ஆகியவற்றைக் காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடத்தை விதிகளை வெளியிட வேண்டும்.

தனிப்பட்ட, அரசியல் விளம்பர நோக்கங்களுக்காக ரீல்ஸ் மற்றும் வீடியோக்களை உருவாக்க பள்ளி வளாகம், வகுப்பறைகள், மாணவர்கள் அல்லது ஆசிரியர்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும்" என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.