புதிய கட்சி அறிவிப்பை வெளியிடுகிறார் சசிகலா? ஜெயலலிதா பிறந்த நாளில் முக்கிய முடிவு
ஜெயலலிதாவும், அண்ணாவும் மக்கள் மனதில் இருக்கின்றனர். அதனால் அவர்களிடம் வேண்டிக் கொண்டு இன்று நல்ல தகவலை சொல்வதாக சசிகலா கூறியுள்ளார்.

Published : February 24, 2026 at 7:48 AM IST
சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளான இன்று பசும்பொன்னில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சில முடிவுகளை அறிவிக்க உள்லதாக சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலா புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இன்று அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அதிமுக, அமமுக கட்சியினர் சார்பில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, இன்று பசும்பொன்னில் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். இந்த பொதுக்கூட்டத்தின் வாயிலாக 2026 சட்டமன்ற தேர்தலில் தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, நேற்று (பிப். 23) மெரினா கடற்கரைக்கு சென்ற சசிகலா, அங்குள்ள ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “எங்களுடைய தலைவர்களான அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் நானும் பயணிக்கிறேன். நாளை (பிப் 24) பசும்பொன்னில் ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். அதில் சில முக்கிய முடிவுகளை அறிவிக்க உள்ளோம். அதற்கு முன்பு ஜெயலலிதாவிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்காக வந்தேன்” என்றார்.
அவரிடம் கட்சி குறித்து அறிவிப்பு வெளியாகுமா? என்று கேட்டதற்கு, “நாளைய (பிப் 24) நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். ஜெயலலிதாவும், அறிஞர் அண்ணாவும் மக்கள் மனதில் இருக்கின்றனர். அதனால் அவர்களிடம் வேண்டிக்கொண்டு நாளை நல்ல தகவலை சொல்கிறேன்” என பதிலளித்தார்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டியாக தேர்தல் களம் உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சியினரும் தீவிரமாக செய்து வருகின்றனர். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக (அன்புமணி), ஐஜேகே, தமாகா, அமமுக, புதிய நீதி கட்சி, தமிழக முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.
அதே போல், திமுக கூட்டணியில், காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, தேமுதிக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தொடர்கின்றன.
அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை துவங்கி தொகுதி பங்கீட்டுக்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் மட்டும் அரசியல் களத்தில் தனித்துவிடப்பட்டுள்ளனர். இந்நிலையில், பசும்பொன்னில் இன்று நடைபெறும் பொதுக் கூட்டத்தின் வாயிலாக தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டை சசிகலா அறிவிப்பார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

