கோவை மாவட்டத்தில் சசிகலா கட்சி கொடியேற்றம் - தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களுடன், அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் உள்ள கட்சியின் கொடி, தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்றப்பட்டு வருகிறது.

Published : March 3, 2026 at 1:26 PM IST
கோயம்புத்தூர்: சசிகலாவின் புதிய கட்சிக் கொடியை அவரது தொண்டர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் முதல்முறையாக சோமனூர் பகுதியில் ஏற்றினர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் புதிய திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட சசிகலா, அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என அறைகூவல் விடுத்து வந்தார். ஏற்கனவே டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதிமுக கூட்டணியில் இணைந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார்.
இதனிடையே சசிகலா, சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தனது புதிய கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 9 ஆண்டுகளாக அமைதியாக இருந்தது போல இனி இருக்க முடியாது. புதிய கட்சியின் பெயர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்'' என்றார். இதனைத் தொடர்ந்து சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களுடன், அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட அந்த பெயரிடப்படாத கட்சியின் கொடி, தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சோமனூர் பகுதியில், சசிகலாவின் ஆதரவாளர்கள் மாவட்டத்தில் முதன்முறையாக இந்தக் கொடியை ஏற்றினர். சோமனூர் ரயில்வே மேம்பாலம் அருகே திரண்ட தொண்டர்கள், புதிய கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கித் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய கட்சி நிர்வாகி வெங்கடாசலம் கூறுகையில், ”தலைமையின் நேரடி அறிவுறுத்தலின் பேரில், எங்களது புதிய கட்சிக் கொடியை இங்கு ஏற்றியுள்ளோம். கோயம்புத்தூர் மாவட்டத்திலேயே முதன்முறையாக எங்களது பகுதியில் இந்தக் கொடி ஏற்றப்பட்டது, எங்களுக்கு மிகுந்த பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
| இதையும் படிங்க: அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு |
வரவிருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் எங்களது கட்சி எந்தக் கூட்டணியில் பயணித்தாலும், சின்னம் எதுவாக இருந்தாலும், சசிகலா கைகாட்டும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய நாங்கள் முழுவீச்சில் பாடுபடுவோம்” என தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சசிகலா புதிய கட்சி தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

