ETV Bharat / state

'இனி பொறுமையா இருக்க முடியாது' - புதிய கட்சி தொடங்கினார் சசிகலா

புதிய கட்சியின் பெயர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சசிகலா தெரிவித்தார்.

புதிய கட்சி கொடியுடன் சசிகலா
புதிய கட்சி கொடியுடன் சசிகலா (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 24, 2026 at 10:57 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ராமநாதபுரம்: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சசிகலாவின் புதிய கட்சி அறிவிப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் தேர்தல் தேதி வெளியாகவும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களத்தில் எதிர்பாரா திருப்புமுனைகள் நிகழ்ந்து வருகின்றன.

அந்த வகையில், அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருந்து வந்த தேமுதிகவும், திமுகவும் தற்போது கூட்டணி அமைத்துள்ளன. அதே போல, எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கும் கூட்டணிக்கு ஒருபோதும் செல்லமாட்டேன் என்ற டிடிவி தினகரனும் தற்போது அதிமுக- தே.ஜ. கூட்டணியில் இணைந்துள்ளார். முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல் தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன், 'எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்' எனும் புதிய கட்சியை தொடங்கிவிட்டார்.

இந்த புதிய திருப்பங்களுக்கு மத்தியில், திமுகவுடன் நீண்ட காலமாக தோழமை கட்சியாக இருந்து வரும் காங்கிரஸ், இந்த முறை திமுகவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் கறார் காட்டி வருகிறது. கூடவே, ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தையும் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் எழுப்பி வருகின்றனர். இவ்வாறு புது புது காட்சிகளை கண்டு வரும் 2026 தேர்தல் களத்தில் சசிகலாவும் மற்றுமொரு பரபரப்பை கிளப்பி உள்ளார்.

பிளவுபட்ட அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று சசிகலா, டிடிவி, ஓபிஎஸ் ஆகியோர் தொடர்ந்து அறைகூவல் விடுத்து வந்தனர். ஆனால், பாஜகவின் தலையீட்டால் டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டார். ஓபிஎஸ் தனித்துவிடப்பட்டுள்ளார். இந்த நிலையில், சசிகலாவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் உற்றுநோக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நலத்திட்ட விழா நடைபெறும் என சசிகலா அறிவித்திருந்தார். அதன்படி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, அவர் புதிய அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மேலும், கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களுடன் வடிவமைக்கப்பட்ட அந்தக் கொடியில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய சசிகலா, “கடந்த 9 ஆண்டுகளாக அமைதியாக இருந்தது போல இனி இருக்க முடியாது. புதிய கட்சியின் பெயர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்'' என கூறினார்.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சசிகலாவின் புதிய கட்சி அறிவிப்பு அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் பாஜகவை எதிர்க்கும் ஒரே அரசியல் தலைவர் விஜய் மட்டுமே' ஆதவ் அர்ஜுனா உறுதி