ரூ. 500 மிரட்டி வாங்கப்படுகிறதா? போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்
மிகப் பெரிய கொடுமையாக தூய்மைப் பணியாளர்களுக்கு வீடு வாடகைக்கு கொடுக்க வீட்டு உரிமையாளர்கள் மறுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Published : July 2, 2026 at 7:47 PM IST
திருப்பத்தூர்: பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாத சம்பளத்தில் ரூ. 500 மிரட்டி கேட்டு வாங்கும் சூப்பர்வைசர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி 100-க்கு மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு இன்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் நகராட்சியில் கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக 147 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு முறையான முககவசம், கையுறை போன்றவைகூட வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், தெருக்களில் செத்து கிடக்கும் நாய் போன்றவற்றை கூட கையுறை மற்றும் முககவசம் இல்லாமலேயே அவர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுவதாகவும், இதன் காரணமாக அவர்களுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயநிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோரிம் பலரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இது தவிர, மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் ரஞ்சித்குமார் என்பவர், பணியாளர்கள் வாங்கும் சம்பளத்திலிருந்து ஒரு நபருக்கு 500 ரூபாய் வீதம் கமிஷன் மிரட்டி வாங்குவதாகவும், பணம் கொடுக்க மறுத்தால் வேலையை விட்டு தூக்கி விடுவேன் என மிரட்டுவதாகவும் தூய்மைப் பணியாளர்கள் கூறுகின்றனர்.
| இதையும் படிங்க: மேகதாதுவில் ஒரு செங்கல்லை கூட வைக்கவிடமாட்டோம்; காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் திட்டவட்டம் |
இது குறித்தும் பலமுறை கமிஷனரிடம் புகார் அளித்தும் அவர் கண்டும், காணாமல் உள்ளதாக தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இத்துடன், மிகப் பெரிய கொடுமையாக தூய்மைப் பணியாளர்களுக்கு வீடு வாடகைக்கு கொடுக்க வீட்டு உரிமையாளர்கள் மறுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த தூய்மைப் பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தங்களின் வேலையை நிரந்தரமாக்க வேண்டும் எனவும் பணியின் போது அவர்களுக்கு தேவையான கையுறை, முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை செய்து தர வேண்டும் மற்றும் மாத சம்பளத்தில் ரூ. 500 மிரட்டி கேட்டு வாங்கும் சூப்பர்வைசரை கண்டிக்க வேண்டும் என கூறி நகராட்சி அலுவலகம் முன்பு இன்று (ஜூலை 2) தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதி சில மணி நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

