ETV Bharat / state

கூவத்தில் இறங்கி போராடிய தூய்மை பணியாளர்கள்... சென்னையில் பெரும் பரபரப்பு

கூவத்திற்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்ட வசந்தி என்பவர் மயக்கம் அடைந்த நிலையில் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கூவத்தில் இறங்கி போராடிய தூய்மை பணியாளர்கள்
கூவத்தில் இறங்கி போராடிய தூய்மை பணியாளர்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 5, 2026 at 10:19 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: தூய்மைப் பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கூவத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை பெருநகர மாநகராட்சியில் மண்டலம் 5, 6 பகுதிகளில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒதுக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை கிரீம்ஸ் ரோடு பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் தூய்மைப் பணியாளர்கள் இறங்கி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பதாகைகளை ஏந்தி, '' நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவை கண்டா வர சொல்லுங்க... கையோடு கூட்டி வாருங்க''என்று பாடலை பாடினர்.

அப்போது போராட்டத்திற்காக, வெளியில் கூடிய தூய்மை பணியாளர்களை கூவத்திற்குள் நுழைய விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த போராட்டத்தால் கிரீம்ஸ் சாலையின் ஒரு புற வழியை காவல்துறையினர் அடைத்தனர். தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக கூவத்தில் இறங்கி போராடியவர்களை கைதுக்கு ஒத்துழைக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினார். அதற்கு மறுப்பு தெரிவித்த தூய்மை பணியாளர்கள், ''கூவத்திற்குள் இறங்கி எங்களை கைது செய்யுங்கள்'' என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்களில் ஒரு குழுவினர் முட்டி அளவில் தேங்கியிருந்த சாக்கடை நீரில் இறங்கி கோஷங்களை எழுப்பி போராடினர்.

பின்னர் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சேரும், சகதியுமாக இருந்த பகுதியில் கயிறு கட்டி, போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை மேலே அழைத்து வந்தனர்.

கூவத்திற்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்ட வசந்தி என்பவர் மயக்கம் அடைந்த நிலையில், தீயணைப்பு துறையினர் அவரை மீட்டு அழைத்து வந்தனர். தொடர்ந்து 15 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் வசந்தி மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. தண்ணீர் தெளித்தும் கண்விழிக்காத நிலையில், அவரை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதை தொடர்ந்து பெண் காவலர்கள் கூவத்திற்குள் போராடிய பெண்களை கையைப் பிடித்து இழுத்து மீட்டு கைது செய்தனர்.

சென்னை கிரீம்ஸ் ரோடு பகுதியில் தூய்மை பணியாளர்கள் திடீரென கூவத்திற்குள் இறங்கி போராடிய நிகழ்வு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: சம வேலைக்கு சம ஊதியம்; போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு