காயமடைந்தவருக்கு தையல் போட்ட தூய்மைப் பணியாளர் - அரசு மருத்துவமனையில் அவலம்
காயமடைந்தவருக்கு தூய்மைப் பணியாளர் தையல் போடுவதை மருத்துவமனையில் இருந்த ஒருவர், செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டதால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Published : January 5, 2026 at 12:40 PM IST
ராணிப்பேட்டை: விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு, அங்கு பணியாற்றும் தூய்மைப் பணியாளர் தையல் போட்டு சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்த நிலையில், நேற்று மாலை கலவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவரும், செவிலியர்களும் பணியில் இருந்த போதும், அந்த மருத்துவமனையில் வேலை செய்து வரும் பெண் தூய்மைப் பணியாளரான கலைச்செல்வி என்பவர், காயமடைந்த ராஜேந்திரனுக்கு தையல் போட்டு சிகிச்சை அளித்துள்ளார்.
இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவிட, அது வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் தீர்த்தலிங்கத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, அந்த வீடியோ காட்சிகள் கலவை அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்டவை என்பதை உறுதிப்படுத்தினார். மேலும், தூய்மைப் பணியாளர் ஒருவர் மருத்துவ சிகிச்சை அளித்தது விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது எனவும் அவர் தெரிவித்தார். பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக தூய்மைப் பணியாளர் கலைச்செல்வி அந்த பணியை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அந்த சமயத்தில் அருகில் இருந்த மருத்துவர், தூய்மைப் பணியாளர் முறையாக சிகிச்சை அளித்ததாக கூறியதாகவும், இந்த விவகாரம் குறித்து தூய்மைப் பணியாளரிடம் தீவிர விசாரணை நடத்த அழைத்துள்ளதாகவும் இணை இயக்குநர் தீர்த்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதே போல், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர் மற்றும் செவிலியர்களையும் விசாரணைக்கு உட்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் அரசு மருத்துவமனைகளில் மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை, கண்காணிப்பு குறைபாடு மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அன்புமணி கண்டனம்
இதனிடையே, இந்த சம்பவத்துக்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு, தூய்மைப் பணியாளர் தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் சீரழிவின் உச்சத்தை அடைந்து விட்டன என்பதற்கு இதை விட மோசமான சான்று இருக்க வாய்ப்பில்லை” என தெரிவித்துள்ளார்.

