ETV Bharat / state

அரசு மருத்துவமனையில் மருந்து கலக்கும் பணியில் தூய்மை பணியாளர்: அதிர்ச்சி வீடியோ

இந்த சம்பவம் குறித்து மாவட்ட சுகாதாரத்துறை உடனடியாக விசாரணை நடத்தி, விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கம் அரசு பொது மருத்துவமனை
செங்கம் அரசு பொது மருத்துவமனை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 3, 2026 at 9:10 AM IST

1 Min Read
Choose ETV Bharat

திருவண்ணாமலை: செங்கம் அரசு பொது மருத்துவமனையில் தூய்மை பணியாளர் ஒருவர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் மருந்துகளை ஊசி மூலம் கலக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் தூய்மைப் பணியாளர்கள் மருத்துவம் சார்ந்த பணிகளில் ஈடுபடக் கூடாது என தமிழக அரசு நேற்று உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் தாலுகாவில் அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. சுற்றுவட்டார கிராமங்கள், மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு முக்கிய சிகிச்சை மையமாக இது விளங்குகிறது. குறிப்பாக, மகப்பேறு சிகிச்சை பிரிவில் தினமும் ஏராளமான கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த மருத்துவமனையின் மகப்பேறு நலப் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் பெண் ஒருவர், மகப்பேறு சிகிச்சை அறைக்கு வெளியே அமர்ந்து கொண்டு, கர்ப்பிணிகளுக்கு செலுத்தப்படும் ஊசி மருந்துகள் சிலவற்றை ஒன்றோடொன்று கலக்கும் பணியில் ஈடுபட்டார்.

மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் (ETV Bharat Tamil Nadu)

இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டிய இந்த பணியை தூய்மை பணியாளர் செய்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், செங்கம் அரசு மருத்துவமனையில் போதுமான அளவு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் பணியில் உள்ளார்களா என்ற சந்தேகத்தையும் பொதுமக்கள் மத்தியில் இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி உண்மை நிலையை தெளிவுப்படுத்த வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செங்கம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கம் மற்றும் விசாரணையில் வெளிப்படை தன்மையையும் பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இதையும் படிங்க: அரசு மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு வராவிட்டால் கடும் நடவடிக்கை: சுகாதாரத்துறை எச்சரிக்கை

முன்னதாக, தமிழக சுகாதாரத்துறை சார்பில் அரசு மருத்துவமனைகளுக்கு நேற்று முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதாவது, அரசு மருத்துவமனைகளில் உள்ள துறை மருத்துவர்கள் மற்றும் புற நோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் தினசரி காலை 7.30 மணிக்கு பணிக்கு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், சரியான மருத்துவப் படிப்போ அல்லது செவிலியர் பயிற்சியோ பெறாத தூய்மைப் பணியாளர்களை எக்காரணம் கொண்டும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.