ETV Bharat / state

முதலமைச்சர் விஜய்யை பார்க்க பள்ளி சீருடையில் வந்த மாணவர்கள்: பறந்தது நோட்டீஸ்

சீருடையில் பள்ளிக்கு புறப்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல், முதலமைச்சர் விஜய்யை பார்ப்பதற்காக சென்றதாக கூறப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 1, 2026 at 10:51 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சேலம்: முதலமைச்சர் விஜய்யை வரவேற்க பள்ளி சீருடையில் மாணவர்கள் நின்றுக் கொண்டிருந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் விஜய் இன்று (செப்.1) திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, அங்குள்ள விவசாயிகளை சந்தித்து அவர்களுடன் புகைப்படங்களையும் முதலமைச்சர் விஜய் எடுத்துக் கொண்டார்.

முன்னதாக, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக மேட்டூருக்கு வேனில் சென்றார்.

அவர் செல்லும் வழிநெடுகிலும் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்களும், தவெக தொண்டர்களும் குவிந்திருந்து முதலமைச்சர் விஜய்க்கு வரவேற்பு அளித்தனர்.

இதனிடையே, முதலமைச்சர் விஜய்யை பார்ப்பதற்காக குவிந்திருந்த மக்கள் கூட்டத்துடன் ஏராளமான பள்ளி மாணவர்களும் சீருடையில் காத்திருந்தனர்.

இதையும் படிங்க: காங்கிரஸ் அமைச்சரை கிண்டல் செய்த உதயநிதி: குலுங்கி குலுங்கி சிரித்த சபாநாயகர்

இதுதொடர்பான புகைப்படமும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. பள்ளி வேலை நேரத்தின் போது எவ்வாறு மாணவர்கள் இங்கு வந்தனர் என சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் கேள்வியெழுப்பினர்.

மேலும், அவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் எனவும் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டதால் பல்வேறு தரப்பு மக்களும் கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்து வந்தனர்.

ஆனால், விசாரணையில் அவர்கள் சேலம் -மேச்சேரி கூட்ரோடு சந்திப்பு அருகே உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் என்பது தெரியவந்தது.

சீருடையில் பள்ளிக்கு கிளம்பிய மாணவர்கள், பள்ளிக்கு செல்லாமல், முதல்வரை பார்ப்பதற்காக சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எல்லப்பன் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "அரசு பள்ளி மாணவர்கள் யாரும் இது போன்று செல்லவில்லை. குறிப்பிட்ட ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் தான் முதலமைச்சர் விஜய்யை பார்க்க சென்றிருக்கிறார்கள். தனியார் பள்ளி அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என எல்லப்பன் விளக்கம் அளித்தார்.

இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.