ETV Bharat / state

அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் வகுப்பறைக்குள் விஷ ஜந்துக்கள் நுழைவதாக மாணவர்களின் பெற்றோர் அச்சம்

சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளி மாணவர்களுக்கு சமையல் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த 3 எரிவாயு சிலிண்டர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவமும் அரங்கேறியுள்ளது.

சுற்றுச்சுவர் இல்லாத ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
சுற்றுச்சுவர் இல்லாத ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 31, 2026 at 10:28 PM IST

2 Min Read
Choose ETV Bharat

வேலூர்: பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் வகுப்பறைக்குள் பாம்பு, விஷப்பூச்சிகள் நுழைவதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக அவர்களின் பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கேசவபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 159 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

பள்ளிக்கு இதுவரை முறையான சுற்றுச்சுவர் அமைக்கப்படாததால், பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் புதர்கள் மற்றும் செடிகள் அடர்ந்து காணப்படுவதாகவும், இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் அப்பகுதி பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பள்ளிக் கட்டடத்தைச் சுற்றிலும் புதர்கள் மண்டிக் கிடப்பதால், பாம்புகள் மற்றும் பல்வேறு விஷப்பூச்சிகள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வகுப்பறைகளுக்குள்ளேயே பாம்பு மற்றும் விஷப்பூச்சிகள் நுழைவதாகவும், இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சத்துடன் பள்ளியில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பெண்கள் தெரிவித்தனர்.

பள்ளி வளாகத்தில் பாதுகாப்பான சுற்றுச்சூழல் இல்லாத காரணத்தால், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கே அச்சமாக இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். மாணவர்களின் உயிர் மற்றும் உடல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளியைச் சுற்றிலும் உடனடியாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: சர்க்கரை விலை அதிகரிப்பு எதிரொலி...டீ, காபி விலை கிடுகிடு உயர்வு

மேலும், பள்ளி மாணவர்களுக்கு சமையல் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த 3 எரிவாயு சிலிண்டர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவமும் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சுற்றுச்சுவர் மற்றும் பாதுகாப்பான இரும்பு கேட் இல்லாததால், பள்ளி வளாகத்திற்குள் வெளிநபர்கள் எளிதாக நுழையும் சூழல் இருப்பதாகவும், இதனால் பள்ளியின் பாதுகாப்பு மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, கேசவபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் அவர்களை நேரில் சந்தித்து, பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் இரும்பு கேட் அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில், பள்ளியில் பயிலும் 159 மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளியைச் சுற்றி உடனடியாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்றும், பள்ளியின் நுழைவாயிலில் பாதுகாப்பான இரும்பு கேட் பொருத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பள்ளி வளாகத்தைச் சுற்றியுள்ள புதர்களை அகற்றி, பாம்பு மற்றும் விஷப்பூச்சிகள் பள்ளிக்குள் புகாத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

“மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டாமல், பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும்” என கேசவபுரம் கிராம பெண்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.