பழனி முருகன் கோயிலில் காணிக்கை மூலம் ரூ.2.26 கோடி வருமானம்
பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக 286.310 கிராம் தங்கம், 10.752 கிலோ வெள்ளி மற்றும் 393 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் கிடைத்துள்ளன.

Published : November 4, 2026 at 10:03 PM IST
திண்டுக்கல்: பழனி முருகன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்ட நிலையில், ரூ.2.26 கோடி காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் திறப்பு மற்றும் காணிக்கை எண்ணும் பணியில், மொத்தம் ரூ.2 கோடியே 26 லட்சத்து 96 ஆயிரத்து 945 ரொக்கக் காணிக்கையாக வசூலாகியுள்ளது.
மேலும், பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக 286.310 கிராம் தங்கம், 10.752 கிலோ வெள்ளி மற்றும் 393 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் கிடைத்துள்ளன.
இதில் பழனி பிரதான கோயில் உண்டியலில் மட்டும் ரூ.2 கோடியே 24 லட்சத்து 26 ஆயிரத்து 874 ரொக்கப் பணம் வசூலாகியுள்ளது. இதனுடன் பழனி திருக்கோவிலின் உபகோயில்களில் கிடைத்த காணிக்கைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
அதன்படி, வன துர்க்கை அம்மன் கோயில் உண்டியலில் ரூ.35,398, அழகு நாச்சியம்மன் கோயிலில் ரூ.11,743, வீர துர்க்கை அம்மன் கோயிலில் ரூ.22,404, மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயிலில் ரூ.50,289 காணிக்கையாகக் கிடைத்துள்ளன.
அதேபோல், லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 411-ம், வரதராஜப் பெருமாள் கோயிலில் ரூ.12,826 காணிக்கையாக வசூலாகியுள்ளன. ஆறு உபகோயில்களிலும் சேர்த்து ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்து 71 ரொக்கப் பணம் கிடைத்துள்ளது.
பிரதான கோயில் மற்றும் உபகோயில்களின் காணிக்கைகளையும் சேர்த்து மொத்தம் ரூ.2 கோடியே 26 லட்சத்து 96 ஆயிரத்து 945 ரொக்கப் பணம் வசூலாகியுள்ளது. கோயில் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த உண்டியல் திறப்பு மற்றும் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் இணை ஆணையர், வங்கி ஊழியர்கள், கோயில் பணியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், நாதஸ்வரப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

