கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை கூடாது: உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
அரசியல் பேரணிகள் மற்றும் கூட்டங்களின் போது உயிரிழந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்கான விதிகள் எதுவும் இல்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published : July 8, 2026 at 8:28 PM IST
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கப்படும் என்ற முதலமைச்சர் விஜயின் முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2025 செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பரப்புரை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பெண்கள், 10 குழந்தைகள் 13 ஆண்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். சுமார் 110 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு 1 லட்ச ரூபாயும் தமிழக அரசு இழப்பீடாக வழங்கியது. மேலும், கரூர் சம்பவம் தொடர்பாக ஓய்வுப்பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தையும் அமைத்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, மற்றும் இணை பொதுசெயலாளர் நிர்மல் குமார், முன்னாள் அமைச்சர் செந்தில பாலாஜி ஆகியோர் சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜராகி இருந்தனர்.
இதனிடையே, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் விஜய், முதல்வராகவும், மற்ற நிர்வாகிகள் அமைச்சர்களாகவும் உள்ளனர். இந்த சூழலில் வரும் ஜூலை 10-ஆம் தேதி தேதி தமிழக முதல்வர் விஜய் கரூர் சென்று கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், அரசியல் பேரணிகள் மற்றும் கூட்டங்களின் போது உயிரிழந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்கான விதிகள் எதுவும் இல்லை. கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது அந்த விசாரணையை நீர்த்து போக செய்துவிடும். சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாற வாய்ப்புள்ளது.
எனவே, சிபிஐ விசாரணை நிறைவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கும் அரசு வேலை வழங்க கூடாது" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

