எழும்பூர் ரயில் நிலையத்தில் தொடரும் சீரமைப்பு பணிகள்: 6வது நாளாக ரயில் பயணிகள் கடும் அவதி
20 அல்லது 30 நிமிடங்கள் இடைவெளியில் மட்டும் மின்சாரம் ரயில் இயக்கப்படுவதால் பயணிகள் மேலும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Published : February 25, 2026 at 4:50 PM IST
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆறாவது நாளாக தொடர்ந்து மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு பணிகளை முன்னிட்டு சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையிலான புறநகர் மின்சார ரயில் சேவையில் 45 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை அதிரடியாக மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த வழித்தடத்தில் தினமும் 208 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 115 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், எழும்பூர் ரயில் நிலையத்தில் வழக்கமாகப் பயன்படுத்தப்பட்ட 10 மற்றும் 11 ஆம் நடைமேடைகளுக்கு பதிலாக விரைவு ரயில்கள் இயக்கப்படும் 5 மற்றும் 6 ஆம் நடைமேடைகளில் இருந்து புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் 20 அல்லது 30 நிமிடங்கள் இடைவெளியில் மட்டும் மின்சாரம் ரயில் இயக்கப்படுவதால் பயணிகள் மேலும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்க, சென்னை எழும்பூர் - பரங்கிமலை மற்றும் கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
| இதையும் படிங்க: ஆன்மிக மகோத்ஸவம் 2026: ஆரோவில்லில் மார்ச் 1 -ம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி |
இந்தநிலையில் ஆறாவது நாளாக தாம்பரம், பெருங்களத்தூர், சானடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் அதிக அளவில் பயணிகள் கூட்டம் குவிந்துள்ளனர். மின்சார ரயில்களில் அனைத்து பெட்டிகளும் நிரம்பி பயணிகள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ரயில் தட்டுப்பாடு ஒருபுறமிருக்க, தாம்பரம் ரயில் நிலையத்தின் 1 மற்றும் 2-வது நடைமேடைகளில் உள்ள தானியங்கி படிக்கட்டுகள் இயங்காதது பயணிகளை மேலும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இதனால் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் நடைமேம்பாலத்தை பயன்படுத்த முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் பாதிப்பு
தற்போது தேர்வுக் காலம் என்பதால், ரயில்கள் குறைக்கப்பட்டிருப்பது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. நேரத்திற்குச் செல்ல முடியாது என்ற அச்சத்தில், பயணிகள் மற்றும் மாணவர்கள் ரயில்களில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ரயில்கள் மாநகர போக்குவரத்து கழகம் கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கினாலும், தொடர்ந்து தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, வண்டலூர், பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களிலும் பயணிகள் காலை நேரங்களிலும் அதேபோல் மாலை நேரங்களிலும் அதிக அளவில் குவிந்து பேருந்துகளில் முண்டியடித்துக் கொண்டு ஏறி பயணித்து வருகின்றனர். தொடர்ந்து 6 வது நாளாக தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளில் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வரும் ரயில்வே மறுசீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து ரயில் சேவைகளை வழக்கம் போல் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

