சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில் சட்டவிரோத விடுதிகள் - நீதிபதிகள் அதிரடி உத்தரவு
நம் பொழுதுபோக்குக்காக வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. சட்டவிரோத ரிசார்ட்களை அப்புறப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Published : January 5, 2026 at 5:02 PM IST
சென்னை: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்ட விரோதமாக செயல்படும் தனியார் ரிசார்ட்களை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில், தேசிய வன விலங்குகள் வாரியம், மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் செயல்படும் சட்ட விரோத ரிசார்ட்கள் காரணமாக, சுற்றுச் சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கோவையைச் சேர்ந்த தன்னார்வலர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்ட விரோதமாக செயல்படும் ரிசார்ட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அமர்வில் இன்று (ஜன 05) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சத்தியமங்கலம் பகுதியில் சட்ட விரோதமாக 42 ரிசார்ட்கள் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், சட்டவிரோத ரிசார்ட்களுக்கு சீல் வைப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "உச்ச நீதிமன்ற உத்தரவு படி, சட்ட விரோத ரிசார்ட்களை அகற்ற வேண்டும். நம் பொழுதுபோக்குக்காக வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. சட்டவிரோத ரிசார்ட்களை அப்புறப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் அறிவித்திருப்பது ஓய்வூதிய திட்டம் அல்ல; அரசு ஊழியர்களை ஏமாற்றும் திட்டம்: இபிஎஸ் விமர்சனம்
இதையும் படிங்க: 'எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு பெண்களிடம் செல்வாக்கு பெற்றவர் ஸ்டாலின்' - அமைச்சர் சிவசங்கர் புகழாரம்
மேலும், சட்ட விரோத ரிசார்ட்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்ற அரசுத் தரப்பு கோரிக்கையை ஏற்று, விசாரணையை ஜனவரி 19 ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அதற்குள் ரிசார்ட்களை அகற்றாவிட்டால், ஈரோடு மாவட்ட ஆட்சியர், வனத் துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என எச்சரித்தனர்.

