நேபாளத்தில் மாயமான கோவையை சேர்ந்த 4 குடும்பங்கள்: தவிக்கும் உறவினர்கள்
நேபாளத்திற்கு சென்ற கோவையை சேர்ந்த 4 குடும்பங்களில் ஒருவர் மட்டும் காத்மாண்டு பகுதியில் தங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சியவர்கள் பற்றி தகவல் கிடைக்காததால் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Published : August 27, 2026 at 11:02 PM IST
கோவை: கோவையில் இருந்து கைலாஷ் யாத்திரைக்கு சென்ற நான்கு குடும்பத்தினரையும் தொடர்பு கொள்ள முடியாததால் அவர்களது உறவினர்கள் பதற்றத்தில் உள்ளனர்.
நேபாளத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ஆற்றின் கரையோரம் இருக்கக்கூடிய ராசுவா, தாடிங், நுவாகோட், கோர்க்கா உள்ளிட்ட நகரங்கள் மொத்தமாக சேதமடைந்தன.
இந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இதுவரை 160 மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. மேலும், 750 மேற்பட்டவர்களை மாயமாகியுள்ளதாகவும், அதில் 133 பேர் இந்தியர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நேபாள நாட்டிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 103 நபர்கள் கைலாஷ் யாத்திரைக்காக இரண்டு குழுக்களாகச் சென்றுள்ளனர். அதில் முதல் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 54 நபர்களும், புதுச்சேரியைச் சேர்ந்த 3 நபர்களும் என மொத்தம் 57 நபர்களும், இரண்டாவது குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 49 நபர்களும் இடம்பெற்றிருந்தனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உட்பட பலர் காணாமல் போனதாகக் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், அங்கு சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவிடும் வகையிலும், தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்கள் தொடர்பு கொள்ள ஏதுவாகவும் அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற கோவையை சார்ந்த 8 பேரின் நிலை குறித்து அறிய முடியாததால் அவர்களின் உறவினர்கள் நண்பர்கள் கவலையடைந்துள்ளனர்.
கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் தாளாளர் காயத்ரி (வயது 45) அவரது கணவர் மற்றும் மகன் சிவந்த் (வயது 25) ஆகியோர் வெங்கடாபுரத்தில் வசித்து வருகின்றனர். அதே தனியார் பள்ளியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்ற புனிதா சந்திரசேகரன் மற்றும் அவரது கணவர் சந்திரசேகரன் (தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர்) ஆகியோர் வடவள்ளி ரேவதி நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் ஐந்து பேரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கைலாச யாத்திரை சென்றுள்ளனர்.
காட்மாண்டு பகுதிக்கு இவர்கள் சென்றடைந்ததை தொடர்ந்து காயத்ரியின் கணவர் மட்டும் காட்மாண்டுவில் தங்கி கொண்டுள்ளார். மீதமுள்ள நான்கு பேரும் வெளியில் சென்று உள்ளனர். இந்த நிலையில் நேபாளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கை தொடர்ந்து இவர்கள் நான்கு பேரையும் தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் தனியார் ஏஜென்சி மூலம் யாத்திரை சென்றதாக கூறப்படும் நிலையில் மாவட்ட நிர்வாகமும் அவர்களை தொடர்பு கொள்ள முயன்று வருகின்றனர். அதே சமயம் இவர்களது உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாரும் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகின்றனர்.
| இதையும் படிங்க: நேபாளத்திற்கு சென்ற மயிலாடுதுறையை சேர்ந்த 7 பேர் பத்திரமாக உள்ளனர்: உறவினர்கள் தகவல் |
பேராசிரியர் சந்திரசேகரனின் இரண்டு மகன்கள் சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள நிலையில் அவர்களும் அரசாங்கத்தை தொடர்பு கொண்டு வருகின்றனர். இதனிடையே சந்திரசேகரின் அண்டை வீட்டாரான ரமேஷ்குமார் கண்ணா, சந்திரசேகரின் மகன் ஹரிஸை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட பொழுது திபெதில் இருப்பதாக தந்தை சந்திரசேகரன் கூறியதாகவும் அதன் பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதே போல் கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் அவரது மனைவி தங்கலட்சுமி மற்றும் பேரூர் பச்சாபாளையத்தை சார்ந்த சாருலதா, சாய்பாபா காலனியை சார்ந்த தாசிவம், ராஜ்திருத் ராம்சண்ட் ஆகியோர் மாயமாகியுள்ளனர்.இவர்கள் அனைவரும் பத்திரமாக திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

