ETV Bharat / state

கோயில்களில் செல்போனுக்கு தடை; மறுபரிசீலனை செய்ய முதல்வருக்கு பறந்த கோரிக்கை

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 கோயில்களில் செல்போன் தடை நடைமுறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 2, 2026 at 10:30 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: கோயில்களில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்டம் அறகண்டநல்லூரை சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கே.ராஜன், தமிழக முதல்வர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில், "தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில்களுக்கு வந்து செல்லும் நிலையில், செல்போன் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையும், அதற்காகப் பாதுகாப்பு மையங்களில் கட்டணம் வசூலிப்பதும் பொதுமக்களுக்குக் கடும் சிரமத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கே.ராஜன்
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கே.ராஜன் (ETV Bharat Tamil Nadu)

பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் வெளியூர் பக்தர்களுக்கு அவசர கால தொடர்பு மற்றும் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானது. மேலும், கோவில்களில் நடக்கும் நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் முறைகேடுகளை ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வரவும், செல்போன்களை கொண்டு செல்வதால் மட்டுமே முடியும்.

எனவே, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நிர்வாக வெளிப்படைத்தன்மையைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு கோயில்களில் செல்போன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள முழுமையான தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கருவறை போன்ற மிக முக்கியமான ஆன்மீகப் பகுதிகளில் மட்டும் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை விதித்துவிட்டு, வளாகத்தின் மற்ற பகுதிகளில் சிறு கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கலாம்" என அதில் தெரிவித்துள்ளார்.

மேலும், செல்போன் பாதுகாப்பு மையங்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்து, பக்தர்களுக்கு இலவசப் பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் வழக்கறிஞர் ராஜன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களின் புனித தன்மை மற்றும் ஆன்மிகச் சூழலை பாதுகாக்கும் வகையில், கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்துவதற்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 கோயில்களில் இந்த நடைமுறை நேற்று முதல் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை, சமயபுரம், ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், நெல்லையப்பர் கோயில், மதுரை அழகர் கோயில், கோவை கோனியம்மன் கோயில், சேலம் கோட்டை மாரியம்மன் கோயில், வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கோணி பார்த்தசாரதி கோயில், திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், குன்றத்தூர் முருகன் கோயில், மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட 52 இடங்களில் இந்த தடை அமலுக்கு வந்துள்ளது.