பிரேமலதாவை சந்தித்த ஆர்.பி உதயகுமார்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Published : November 17, 2025 at 6:52 PM IST
மதுரை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் தேர்தல் பணிகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிர வாக்காளர் திருத்த பணிகளையும் (எஸ்ஐஆர்) மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகளிலும் கட்சிகள் தங்கள் முகவர்களை ஈடுபடுத்தி வாக்காளர்களை சரி பார்க்கும் பணிகளை துவங்கியுள்ளன. இந்நிலையில் தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று மதுரை தெப்பக்குளம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் சார்பாக தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தி வந்தனர். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சரும் கட்சியின் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் பிரேமலதாவை சந்தித்தார். அதிமுக கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வருவது குறித்த பேச்சுவார்த்தைகள் அதிமுக சார்பாக நடைபெற்று வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பிரேமலதாவை சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உடனான சந்திப்பு குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”அண்மையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தாயார் காலமானார். அது குறித்து அவரிடம் துக்கம் விசாரிப்பதற்கு வந்தேன். மற்றபடி வேறு எந்த அரசியல் காரணமும் இதில் இல்லை.
ஆறுதல் தெரிவிப்பதற்கான சந்திப்பு மட்டும் தான். மனிதாபிமான அடிப்படையில் துக்கம் விசாரிப்பதற்காக நேரில் வருகை தந்தேன். சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் தெரிவிப்பார். இதில் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை” என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், நேற்று தேனியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரேமலதா, தேமுதிக யார் என்பதை நாமும் தேர்தலில் நிரூபிப்போம் என்றும், 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்குமோ அந்த கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும் என்று பேசியிருந்தார்.

