ETV Bharat / state

கிபி 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த அரிய வகை ஆசிரியம் கல்வெட்டு மதுரை அருகே கண்டுபிடிப்பு

சுமார் 3 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட இந்த கல்வெட்டில், 'ஸ்வஸ்தி ஸ்ரீ துவராபதி பாண்டியர் சதுர்வேதி மங்களமும் நாயன்மார் கோயில்களும் குன்றத்தூர் நாட்டார் ஆசிரியம்' என்கிற வாசகம் இடம்பெற்றுள்ளது.

சிற்பத்துறை ஆய்வாளர் தேவி அறிவுச்செல்வம் மற்றும் அவரது குழு
சிற்பத்துறை ஆய்வாளர் தேவி அறிவுச்செல்வம் மற்றும் அவரது குழு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 3, 2026 at 10:42 PM IST

2 Min Read
Choose ETV Bharat

மதுரை: கிபி 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த அரிய வகை ஆசிரியம் கல்வெட்டு வைகை ஆற்றின் கரையோரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை கிழக்கு ஊராட்சி பகுதியில் உள்ள சக்குடி கிராமம் அருகே வைகை ஆற்றின் கரையோரத்தில் சிற்பத்துறை ஆய்வாளர் தேவி அறிவுச் செல்வம் தலைமையிலான குழு தொல்லியல் பொருள் குறித்த ஆய்வை நடத்தியது. அப்போது, கிபி 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை ஆசிரியம் கல்வெட்டு கிடைத்து உள்ளது.

இதுகுறித்து சிற்பத்துறை ஆய்வாளர் தேவி அறிவுச்செல்வம் கூறியபோது, "இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த கல்வெட்டு கிபி 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டியர்கள் காலத்தைச் சேர்ந்த ஆசிரியம் கல்வெட்டு ஆகும். வைகை ஆற்றின் வடக்கு கரையோரத்தில் இது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

'ஆசிரியம்' என்பது ஒரு இடம் அல்லது கோயில் அல்லது பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகக் கொடுக்கப்படும் வாக்குறுதியாகும். சுமார் மூன்று அடி உயரமும், இரண்டு அடி அகலமும் கொண்ட சதுர வடிவ பலகைக் கல்லில், 'ஸ்வஸ்தி ஸ்ரீ துவராபதி பாண்டியர் சதுர்வேதி மங்களமும் நாயன்மார் கோயில்களும் குன்றத்தூர் நாட்டார் ஆசிரியம்' என்கிற வாசகம் இடம் பெற்றுள்ளது. மேலும், கல்வெட்டின் கீழே முக்காலி செதுக்கி அதன் மீது பூரண கும்பமும், இரண்டு பக்கங்களில் குத்துவிளக்கு கொண்ட மங்கல சின்னமும் செதுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

ஆசிரியம் கல்வெட்டின் புகைப்படம்
ஆசிரியம் கல்வெட்டின் புகைப்படம் (ETV Bharat Tamil Nadu)

தொடர்ந்து பேசிய அவர், "வைகை ஆற்றுக் கால்வாயின் ஒருபுறம் சிவன்- மீனாட்சி கோயிலும், மறுபுறம் பெருமாள் கோயிலும் உள்ளன. பெருமாள் கோயில் முற்றிலும் சிதைந்துள்ளது. இதன் மூலவர் சிற்பமான பெருமாள், ஸ்ரீதேவி, மூதேவி சிற்பங்கள் மரத்தின் அடியில் வைக்கப்பட்டு முனி என்ற பெயரில் வழிபாடு செய்யப்படுகின்றது.

சிவன் கோயில் தற்போது புதிய கட்டுமானத்துடன் காட்சியளிக்கிறது. இங்கு இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. அதில் ஒன்றில், "எவரொருவர் இச்சிவாலயத்தைப் புனரமைப்பதிலும் பாதுகாப்பதிலும் உதவிடுகிறார்களோ அவர்களுக்கு 'மோட்சகதி' நிச்சயம். அவர்களின் திருப்பாதங்களை என் சிரம்மேல் வைத்துப் போற்றுவேன்" என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தை பழுது பார்க்க கால தாமதம்; ஆட்டோ ஏஜென்சி நிறுவனம் ரூ.60,000 நஷ்டஈடு வழங்க உத்தரவு

மற்றொரு கல்வெட்டு, கிபி 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பலகைக் கல்வெட்டு ஆகும். அதில், கொடை அளித்தது பற்றியும், அக்கொடையை செய்யவிடாமல் தடுத்தாலோ அல்லது அழித்தாலோ ஏற்படும் தீமை பற்றியும் எழுதப்பட்டுள்ளது.

இதுபோன்று பல்வேறு சிறப்பு கல்வெட்டுகளைக் கொண்ட கிராமமாக சக்குடி உள்ளது. இது கீழடிக்கு மிக அருகில் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு. தற்போது கண்டறியப்பட்டதைப் போன்ற மேலும் சில ஆசிரியம் கல்வெட்டுகள் மதுரை மாவட்டத்தின் பால்குடி போன்ற ஒரு சில இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியம் கல்வெட்டு குறித்த தகவல்களை தொல்லியல் அறிஞர் சோ. சாந்தலிங்கம் சரிபார்த்து உறுதி செய்துள்ளார்" என்று தேவி அறிவுச்செல்வம் தெரிவித்தார்.