மூத்த குடிமக்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு குறி; பிடிபட்ட 'டிஜிட்டல் அரெஸ்ட்' கும்பல்
இந்த டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் பெரும்பாலும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், தனிமையில் உள்ள முதியவர்கள், தனியார் நிறுவன மேலாளர்கள் என பல்வேறு நபர்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

Published : February 24, 2026 at 5:08 PM IST
ராணிப்பேட்டை: டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் பல்வேறு நபர்களை மிரட்டி லட்சக்கணக்கான பணம் பறித்த ஆந்திராவைச் சேர்ந்த கும்பலை ராணிப்பேட்டை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசு அதிகாரிகள் அல்லது சிபிஐ (CBI) அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றும் ஆன்லைன் மோசடிகள் பெருகியுள்ளன. அதன்படி, வாட்ஸ்அப் மூலம் வீடியோ காலில் தொடர்பு கொண்டு பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் "டிஜிட்டல் அரெஸ்ட்" மோசடி குறித்து ராணிப்பேட்டை சைபர் க்ரைம் பிரிவு போலீசாருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி புகார் ஒன்று வந்தது.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் க்ரைம் போலீசார், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் உத்தரவின் பேரில் 5 சிறப்பு குழுக்கள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

குறிப்பாக, புகாரில் கிடைக்கப்பெற்ற செல்ஃபோன் எண்களின் அடிப்படையில் வங்கி கணக்குகள், செல்ஃபோன் பதிவுகள் மற்றும் புலன்விசாரணைக்கு பயன்படுத்தப்படும் பிரத்யேக மென்பொருள் ஆகியவற்றின் உதவியோடு விசாரணை நடத்தப்பட்டது.
சிம் கார்டு மோசடி
மோசடி கும்பல் பயன்படுத்திய எண்களை ஆய்வு செய்ததில், கடந்த ஓராண்டில் மட்டும் அந்த எண்களைப் பயன்படுத்தி 542 சிம் கார்டுகள் மாற்றப்பட்டு பல்வேறு நபர்களை மிரட்டி லட்சக்கணக்கான பணம் பறித்த அதிர்ச்சி உண்மை தெரிய வந்தது. இதில் பெரும்பாலும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், தனிமையில் உள்ள முதியவர்கள், தனியார் நிறுவன மேலாளர்கள் என பல்வேறு நபர்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், அவர்களுடைய தொலைபேசி எண்களை தொடர்ந்து கண்காணித்ததில் சிம் கார்டு வாங்குவதற்காக அந்த கும்பல் தமிழகம் வந்திருப்பது தெரிந்தது.

இதனை தொடர்ந்து அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற தனிப்படை போலீசார், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிங்கம்பல்லி கணேஷ் (36), பப்பலா கிஷோர் குமார் (36), செல்லா சந்தீப் குமார் (27), சனபதி பிரசாத் (28), தல்லா ராமகிருஷ்ணன் (29) ஆகிய 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
மேலும், இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற கூட்டாளிகள், இவர்களது நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் பிற மாநிலங்களில் இவர்கள் செய்துள்ள குற்றங்கள் குறித்து தெரிந்துகொள்ள அவர்களை போலீசார் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை
"டிஜிட்டல் அரெஸ்ட்" என்ற பெயரில் எந்த ஒரு அரசு அதிகாரியும் வாட்ஸ்அப் மூலம் உங்களை விசாரணை செய்ய மாட்டார்கள். அடையாளம் தெரியாத நபர்களிடம் உங்கள் வங்கித் தகவல்களையோ அல்லது தனிப்பட்ட விவரங்களையோ பகிர வேண்டாம். சைபர் மோசடியில் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற உதவி எண்ணையோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தையோ தொடர்பு கொள்ள வேண்டும் என போலீசாரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

