ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் தாஹிரா வெற்றி
திமுக அமைச்சர் காந்தி 85,362 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார்.

Published : May 4, 2026 at 1:31 AM IST
|Updated : May 5, 2026 at 11:00 PM IST
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் தாஹிரா வெற்றி பெற்றுள்ளார். திமுக அமைச்சர் காந்தி முன்னிலை வகித்து வந்த நிலையில் 5,787 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வென்றுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முக்கிய தொகுதிகளில் ஒன்றான சோளிங்கர் சட்டமன்ற தொகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.
ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி வாக்காளர் எண்ணிக்கை
ஆண்கள் - 1,31,012
பெண்கள் - 1,40,451
மூன்றாம் - பாலினம் -36
மொத்தம் - 2,71,499
ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ராணிப்பேட்டை தொகுதியில் 88.51% வாக்குகள் பதிவானது. இது கடந்த சட்டமன்ற தேர்தலை விட மிக அதிகமான எண்ணிக்கையாகும். இந்நிலையில், ராணிப்பேட்டை தொகுதியில் இந்த முறை யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது. வன்னியர், பட்டியல் சமூக மக்கள் அதிகம் இருக்கும் இந்த தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் காந்தி போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் கார்த்திகேயன் , தவெக சார்பில் தாஹிரா, நாம் தமிழர் கட்சி சார்பில் தாரிகா சல்மான் போட்டியிடுகின்றனர்.
ராணிப்பேட்டை தொகுதியை பொறுத்தவரை வரை திமுகக்கு நல்ல வாக்கு வங்கி இந்த தொகுதியில் உள்ளன. கடந்த முறையாக இந்த தொகுதியில் திமுக சார்பாக அமைச்சர் காந்தி இங்கு வெற்றி பெற்றிருந்த நிலையில், தொகுதியை மீண்டும் வசப்படுத்த வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் கடந்த ஒரு மாதமாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வந்தனர். பாஜக தரப்பிலும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் பரப்புரை முன்னெடுக்கப்பட்டது. இந்த தொகுதியில் மற்ற கட்சிகள் வெறும் பார்வையாளர்களாகவே இருக்கும் நிலையில் திமுக, பாஜக வேட்பாளர்களிடையே நேரடி போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1952-க்கு தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு ராணிப்பேட்டை தொகுதி இதுவரை 16 பொதுத் தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் திமுக 7, அதிமுக 3, காங்கிரஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ளன. இந்த முறை திமுக, பாஜக இடையே நேரடியாக மோதுவதால் கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட காந்தி, பாமக வேட்பாளர் சுகுமாரை சுமார் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
இந்த நிலையில், அமைச்சர் காந்தியை தவெக வேட்பாளர் தாஹிரா 5,787 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். அவர் 91,149 வாக்குகளைப் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக அமைச்சர் காந்தி 85,362 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார்.
| ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி - ஒரு பார்வை | ||
| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி |
| 2021 | ஆர். காந்தி | திமுக |
| 2016 | ஆர். காந்தி | திமுக |
| 2011 | ஏ. முகமது ஜான் | அதிமுக |

