ETV Bharat / state

காங்கிரஸுக்கு அடித்த 'ஜாக்பாட்' - ராஜ்யசபா சீட் வழங்கினார் முதல்வர் விஜய்

கடந்த மூன்று மாதங்களில் இரு கட்சிகளிடம் இருந்து இரண்டு எம்பிகள் பதவிகளை காங்கிரஸ் கட்சி பெற்றதன் மூலம், மாநிலங்களவையில் அதன் பலம் 30 ஆக அதிகரிக்க உள்ளது.

கோப்புப்படம்
முதலமைச்சர் விஜய் - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 3, 2026 at 5:49 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.வி. சண்முகம் கடந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் அவர் தனது மாநிலங்களவை உறுப்பனர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து காலியான அந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வரும் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

இந்த நிலையில், மாநிலங்களவை இடைத் தேர்தலில் தவெக போட்டியிட்டால் மிக எளிதாக வெற்றி பெறும் என்ற சூழ்நிலையில், அக்கட்சியை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தங்களுக்கு ஒதுக்க வேண்டி முதல்வர் விஜய்யை இன்று சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழுவினர் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து, மாநிலங்களவை இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

முதல்வர் விஜய் அறிவிப்பு
தவெக சார்பில் வெளியான அறிவிப்பு (ETV Bharat Tamil Nadu)

காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை தொடர்ந்து, காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு தமிழக சட்டப் பேரவையில் 5 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும், அமைச்சரவையில் அந்த கட்சியின் சார்பில் ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸுக்கு தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் திமுகவிடம் ஒரு மாநிலங்களவை இடத்தை காங்கிரஸ் கட்சி பெற்றது. அப்போது அக் கட்சியின் சார்பில் கிறிஸ்டோர் திலக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஆனால், தேர்தல் முடிவு வெளியான இரண்டு நாட்களில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ், தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. மேலும் அமைச்சரவையிலும் பங்கேற்றது.

கடந்த மூன்று மாதங்களில் இரு கட்சிகளிடம் இருந்து இரண்டு எம்பிகள் பதவிகளை காங்கிரஸ் கட்சி பெற்றதன் மூலம், மாநிலங்களவையில் அதன் பலம் 30 ஆக அதிகரிக்க உள்ளது.

இதற்கிடையே இந்தியா கூட்டணியில் தவெகவை இணைப்பது தொடர்பாக காங்கிரஸ் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், முதல்வர் விஜய் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு முதலமைச்சர் விஜய் வழங்கியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.