மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்தவர் நல்லகண்ணு - ரஜினி புகழாரம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

Published : February 25, 2026 at 4:03 PM IST
சென்னை: தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது.
— Rajinikanth (@rajinikanth) February 25, 2026
அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள்.
பிரபல நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள்” என தெரிவித்துள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்; பொதுநலத்துக்கென்றே சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் நல்லகண்ணு ஐயா நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார். ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் நலன்களுக்காக 80 ஆண்டு காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர். நேர்மைக்கும் தூய்மைக்கும் எளிமைக்கும் அரசியல் நாகரீகத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர். தகைசால் தமிழரே, செவ்வணக்கம். உமது புகழ் நிலைக்கட்டும். உமது பணிகள் எம்மில் தொடரட்டும்” என தெரிவித்துள்ளார்.
தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்; பொதுநலத்துக்கென்றே சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் நல்லகண்ணு ஐயா நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.
— Kamal Haasan (@ikamalhaasan) February 25, 2026
ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் நலன்களுக்காக 80 ஆண்டு… pic.twitter.com/mgNzkYG98b
நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அனுபவம் மிக்க, பண்பட்ட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணு ஐயா அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி மனதை வாட்டுகின்றது. போராளியாய் வாழ்ந்த, பொதுவுடமையின் பொக்கிஷம், எளிமையின் சின்னம், தோழமையின் தூண் சாய்ந்து விட்டது என்ற செய்தி, துயரத்தை தருகிறது. அவரை இழந்து வாடும் அவரது இல்லத்தாருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ராஜூ முருகன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “இனியொருவர் வாழவே முடியாத உன்னத வாழ்வு உங்களது. இனியொருவர் செய்யவே முடியாத மக்களுக்கான போராட்ட அரசியல் உங்களது. அரசு மருத்துவமனையில் உயிர் பிரிவது என்பது உங்களைப் போன்ற இடதுசாரி இயக்க தலைவர்களுக்கு மட்டுமே உரிய வரலாறு.
சொல்லுக்கும் வாழ்வுக்கும் இடைவெளியற்ற, இணையற்ற எங்கள் ஆர்.என்.கே தோழரே... போய் வாருங்கள். உங்கள் கைகளின் வெப்பம் எப்போதும் எங்கள் நெஞ்சங்களில் தகித்திருக்கும். இந்தக் கடினமான சமூக சூழலில், உங்கள் அறத்தின் நிழல் வரும் தலைமுறைகளின் மீது பரவட்டுமாக. செவ்வணக்கம் தோழர்” என தெரிவித்துள்ளார்.
நம் காலத்தின் மகத்தான தோழர் ஆர்.நல்லகண்ணு மறைந்தார்
— pa.ranjith (@beemji) February 25, 2026
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து, இளம் வயதிலேயே தொழிலாளர் போராட்டத்தின் பாற் ஈடுபாடு கொண்டு, தம் போராட்ட வாழ்வை தொடங்கியவர். இன்று தமிழகம் முழுவதும் இயங்கும் விவசாய சங்கங்கள் உருப்பெறுவதற்கு கடந்த நூற்றாண்டில்… pic.twitter.com/BvPnYfN7fO
அதேபோல் இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “நம் காலத்தின் மகத்தான தோழர் ஆர்.நல்லகண்ணு மறைந்தார் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து, இளம் வயதிலேயே தொழிலாளர் போராட்டத்தின் பாற் ஈடுபாடு கொண்டு, தம் போராட்ட வாழ்வை தொடங்கியவர். இன்று தமிழ்நாடு முழுவதும் இயங்கும் விவசாய சங்கங்கள் உருப்பெறுவதற்கு கடந்த நூற்றாண்டில் அடித்தளமிட்ட தலைவர்களுள் முதன்மையானவர். இன்றைய இந்திய அரசியலானது கடந்த எண்பதாண்டு காலம் நாம் சந்தித்த ஏராளமான போராட்டங்களின் விளைவு.
காலனிய ஆட்சிக்காலத்தில் அதிகாரத்தை எதிர்த்து தலைமறைவு போராட்டம், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டம், பல்வேறு தொழிலாளர் நலச் சங்கப் போராட்டம் என அவர் முன்னின்று நடத்திய போராட்டங்கள் எண்ணிலடங்காதவை. சாதிய நல்லிணக்கத்திற்காக தொடர்ந்து போராடியவர், அப்போராட்டத்தில் தம் குடும்ப உறுப்பினரை பறிகொடுத்த பின்னரும் பட்டியல் சமூக மக்கள் பக்கம் நின்றவர்.
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மாநிலச் செயலாளராக நெடுநாள் நீடித்தவர். தூத்துக்குடி மாவட்டத்தில் துவங்கிய அவரது போராட்ட வாழ்க்கை, பின் இந்திய அளவிலான இடதுசாரி தலைவர்களில் முதன்மையானவராக தொடர்ந்தது. அவரது வாழ்க்கை ஓர் அரசியல் பயணம் மட்டுமல்ல; அது ஒரு நெறிப்பாடம். இன்றைய தலைமுறைக்கு தம் அறநேர்மையான செயல்பாட்டினூடாக ஓர் வழித்தடத்தை உருவாக்கிவிட்டுச் சென்றுள்ளார். தன் உழைப்பாலும் நேர்மையாலும் அவர் என்றும் வாழ்வார். செவ்வணக்கம், தோழர் நல்லகண்ணு” என தெரிவித்துள்ளார்.
என்னவென்று சொல்வது?
— DIRECTOR VA. GOWTHAMAN (@VaDirector) February 25, 2026
போய் வாருங்கள் ஐயா
🥲🙏
தமிழ்ப் பேரரசு கட்சியின்
சார்பாக ஆழ்ந்த இரங்கலும்
கண்ணீர் அஞ்சலியும். pic.twitter.com/l6FJEILbvK
| இதையும் படிங்க: முழு அரசு மரியாதையுடன் தோழர் நல்லகண்ணுவை வழியனுப்பி வைப்போம் - முதல்வர் ஸ்டாலின் உருக்கம் |
மேலும் இயக்குநர் கௌதமன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “என்னவென்று சொல்வது? போய் வாருங்கள் ஐயா. தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலும், கண்ணீர் அஞ்சலியும்” என கூறியுள்ளார்.

