ETV Bharat / state

விரைவில் பூந்தமல்லி, வடபழனி இடையே மெட்ரோ ரயில் - ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி

பிரேக்கிங் தொழில்நுட்பம், தண்டவாளத்தின் தரம், ரயில் பெட்டிகளின் வசதி, பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 28, 2026 at 4:57 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: 4 நாட்கள் நடத்தப்பட்ட தொடர் ஆய்வுக்குப் பின்னர், பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி அனுமதி வழங்கினார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் முக்கிய பங்காற்றி வரும் மெட்ரோ சேவையின் இரண்டாம் கட்ட பணிகள் மாதாவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், பூந்தமல்லி முதல் சென்னை கலங்கரை விளக்கம் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மூன்று வழித்தடங்களில் 118.9 கி.மீ தொலைவிற்கு நடைபெற்று வருகின்றன. இவற்றில் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள 4வது வழித்தடத்தில் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே இந்த வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பூந்தமல்லி, போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கு முன்பு, இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் முன்னிலையில், சோதனை ஓட்டம் நடத்தி காண்பிக்கப்பட்டு சான்றிதழ் பெறப்பட்டது.

அப்போது 90 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு, பயணிகளின் பயண வசதி குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. பிரேக்கிங் தொழிநுட்பம், தண்டவாளத்தின் தரம், ரெயில் பெட்டிகளின் வசதி, பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பூந்தமல்லி, வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான இறுதி ஆய்வை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி மேற்கொண்டார்.

பிரேக்கிங் தொழில்நுட்பம், தண்டவாளத்தின் தரம், ரயில் பெட்டிகளின் வசதி, பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் குறித்து முதல் இரண்டு நாளும், அதனைத்தொடர்ந்து மூன்றாவது நாள் மெட்ரோ ரயிலை 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கியும், நான்காவது நாள் மெட்ரோ அலுவலகத்தில் இருந்தும் ஆய்வு செய்தார்.

மேலும் ரயிலில் உள்ள பயணிகள் அவசர காலங்களில் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொள்ளும் வசதி, தீ விபத்து ஏற்பட்டால் செயல்படும் புகை கண்டறியும் கருவிகள், ரயிலின் அடியில் உள்ள உபகரணங்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் செயல்படும் பாதுகாப்பு அமைப்புகள், மற்றும் ரயிலின் இழுவை அமைப்பு (traction system) ஆகியவை சரியாக இயங்குகின்றதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

அதேபோல் ரயில்கள் மோதிக் கொண்டால் எத்தனை பெட்டிகள் சேதமடையும் என்பதை அறிய, அதன் உருவகப்படுத்துதல் வடிவமைப்பையும் (simulation design) ஆய்வு செய்ய உள்ளார். மேலும், அவசர காலங்களில் ரயிலை நிறுத்துவதற்கு எவ்வளவு தூரம் தேவைப்படுகிறது என்பதை அறிய, அவசர கால பிரேக்குகளைப் பயன்படுத்தியும் சோதனைகள் நடைபெற்றது.

இதையும் படிங்க: பிரபல பிரியாணி கடையில் கெட்டுப்போன பீப் சவர்மா விற்பனை வாடிக்கையாளருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி சோதனை செய்த பின் பூந்தமல்லி, வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.