பூந்தமல்லி - போரூர் மெட்ரோ சேவை - தற்காலிக பாதுகாப்பு சான்றிதழ் வழங்கிய ரயில்வே வாரியம்
பிரேக்கிங் தொழிநுட்பம், தண்டவாளத்தின் தரம், ரயில் பெட்டிகளின் வசதி, பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் பற்றி ஆய்வு செய்யப்பட்டு, மெட்ரோ ரயில் பாதை சிக்னல் தொழில்நுட்பத்திற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

Published : January 10, 2026 at 3:21 PM IST
சென்னை: பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயிலை இயக்குவதற்கு ரயில்வே வாரியம் தற்காலிக பாதுகாப்பு சான்றிதழ் வழங்கி உள்ளது. இறுதிகட்ட சோதனை வரும் 20 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும், நிரந்தர பாதுகாப்புச் சான்றிதழ் அப்போது கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வாகனங்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக, காலை 7 மணிக்கு தொடங்கும் போக்குவரத்து நெரிசல் இரவு 1 மணி வரை நீடிக்கிறது. இதனால் அருகில் உள்ள இடத்திற்கு செல்லவே அதிக நேரம் செலவாகிறது.
எனவே அலுவலகங்களுக்கு செல்பவர்களுக்காவும், விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களுக்கு உடனடியாக செல்லும் விதமாக மெட்ரோ ரயில் திட்டம் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் காரணமாக தினந்தோறும் பல லட்சம் மக்கள் பயனடைந்து வருகிறார்கள். எனவே இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் சென்னையில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி - போரூர் சந்திப்பு வரையில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை கடந்த டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்காததால் மெட்ரோ ரயிலை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் முன்னிலையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. 90 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கி, பயணிகளின் பயண வசதி குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது.
மேலும் பிரேக்கிங் தொழிநுட்பம், தண்டவாளத்தின் தரம், ரயில் பெட்டிகளின் வசதி, பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் பற்றி ஆய்வு செய்யப்பட்டு, மெட்ரோ ரயில் பாதை சிக்னல் தொழில்நுட்பத்திற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
அதே போல் சிக்னல் தொழில்நுட்பத்திற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது பூந்தமல்லி-போரூர் இடையே மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான தற்காலிகப் பாதுகாப்புச் சான்றிதழை ரயில்வே வாரியம் வழங்கி இருப்பதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| இதையும் படிங்க: கிரீன்லாந்தை கைப்பற்ற கடினமான பாதையை தேர்ந்தெடுக்கவும் அமெரிக்கா தயங்காது - டிரம்ப் பகிரங்க மிரட்டல் |
ஆகவே இறுதிக்கட்ட சோதனை வரும் 20 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும், நிரந்தர பாதுகாப்பு சான்றிதழ் அப்போது கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த மாதம் இறுதியில் போரூர்- பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

