ETV Bharat / state

'சகோதரர்' என குறிப்பிடாமல் முதல்வர் ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி வாழ்த்து... தேர்தல் மனக்கசப்பு எதிரொலி?

ஆட்சியில் பங்கு பிரச்சினை, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி போன்ற தேர்தல் மனக்கசப்பே ராகுல் காந்தியின் வாழ்த்து பதிவில் எதிரொலிப்பதாக விவாதம் எழுந்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (@mkstalin X)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 1, 2026 at 7:03 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி ராகுல் காந்தியின் வாழ்த்து பதிவு அரசியல் களத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தமது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவு விமர்சிக்கப்பட்டு வருகிறது. காரணம், வழக்கமாக ஸ்டாலினின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் ராகுல் காந்தி, அவரை ''சகோதரர்'' என்றே குறிப்பிடுவார். ஆனால், இந்த முறை '' தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நல்ல ஆரோக்கியம், வலிமை மற்றும் நீண்ட ஆயுள் பெற்று தமிழக மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய வாழ்த்துகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவில் 'சகோதரர் ஸ்டாலின்'' என்று இடம்பெறாததால் அதனை வெறும் ஃபார்மல் ஆன வாழ்த்தாக விமர்சகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், ராகுல் காந்தியின் கடந்தாண்டு வாழ்த்து பதிவில், '' எனது சகோதரரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை, கூட்டாட்சி அமைப்பு மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்போம் என்ற உறுதிப்பாட்டில் நாங்கள் தொடர்ந்து ஒன்றாக பயணிக்கிறோம்.'' என கூறியிருந்தார். அதற்கு முந்தைய வாழ்த்துகளிலும் இவர் முதல்வர் ஸ்டாலினை சகோதரர் என்றே குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த முறை அப்படி சொல்லவில்லை. மேலும், ராகுல் காந்தியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வரும், '' உங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி'' என எளிமையாக முடித்துக்கொண்டார்.

இதற்கு ராகுல் காந்தியின் தேர்தல் மனக்கசப்பு காரணமாக இருக்கலாம் எனவும் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இருப்பினும், திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக, கூட்டணி பேச்சுவார்த்தைக்காக காங்கிரஸ் 70 நாட்களுக்கும் மேலாக திமுகவின் அழைப்புக்காக காத்துக்கொண்டிருந்தது. சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் '' திமுகவுடன் அதிகாரப்பூர்வ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்காததால் எங்கள் தலைவர்கள் மிகுந்த வலியோடு இருக்கின்றனர்'' என்று கூறினார்.

தவிர, திமுகவிடம் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் உள்ளிட்ட டிமாண்டுகளை காங்கிரசின் இரண்டாம் கட்ட தலைவர்கள் வைத்து வந்தனர். மேலும், இம்முறை தவெக உடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் சிலர் பொதுவெளியில் பேசி வந்தனர். இதை திமுக விரும்பவில்லை. இதுவே, இந்த இழுபறிக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. எனவே, இதனால் ஏற்ப்பட்டுள்ள தேர்தல் மனக்கசப்பே ராகுல் காந்தியின் வாழ்த்து பதிவில் எதிரொலித்துள்ளதாக விவாதம் எழுந்துள்ளது.