ETV Bharat / state

அரசியல் காரணங்களுக்காக குண்டர் சட்டம் பயன்படுத்தப்படுகிறதா? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

தனது 28 ஆண்டுகால காவலர் பணியில் எந்த சூழ்நிலையிலும் குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்தியது இல்லை என அருண் ஐபிஎஸ் தெரிவித்தார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2026 at 8:37 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: அரசியல் காரணங்களுக்காக இதுவரை யார் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்யப்படவில்லையா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை கொளத்தூர் ராமதாஸ் நகரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் சகோதரர் எல்.கே.சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமான 2 ஏக்கர் 10 சென்ட் நிலத்தில் 234 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி, அதில் 78 குடியிருப்புகளை சுதீஷ் மற்றும் பூர்ணஜோதிக்கு ஒதுக்குவதாக தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் ஷர்மா ஒப்பந்தம் செய்து கொண்டார்.

ஒப்பந்தத்தின் அடிப்படையில், சுதீஷ் மற்றும் அவரது மனைவிக்கு ஒதுக்கப்பட்ட 78 குடியிருப்புகளை போலி கையெழுத்திட்டு, 43 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட சந்தோஷ் சர்மா ஜாமீனில் விடுதலையான நிலையில், வாங்கிய குடியிருப்புகளை ஒப்படைக்காமல் ஏமாற்றிவிட்டதாக, 2025ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் 2025 செப்டம்பர் 22ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சந்தோஷ் சர்மாவின் மகள் வர்ஷா சர்மா தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தனது மகள் வர்ஷா சர்மாவின் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், மகளை கவனித்துக்கொள்ள தனது கணவருக்கு 4 வாரம் ஜாமீன் வழங்க வேண்டும் என சந்தோஷ் சர்வாவின் மனைவி கல்பனா சர்மா இடைக்கால கோரிக்கை மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி. ஆர்.சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அமர்வு, குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்த காவல்துறை ஆணையர் அருண் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் ஆஜரான அருணிடம், இந்த வழக்கு தொடர்பாக நேற்று நீதிமன்றத்தின் சம்மனை கொடுக்க வந்த அதிகாரியை பிற்பகல் 3.05 முதல் 5.15 வரை சுமார் 2 மணி நேரம் காத்திருக்க வைத்தது ஏன்? நீதிமன்ற உத்தரவின் படி சம்மன் வழங்க வந்த அதிகாரியை ஏன் இவ்வளவு நேரம் காத்திருக்க வைக்க வேண்டும் என கேள்வி எழுப்பினர்.

பின்னர், சம்மன் வழங்கிய அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை நீதிமன்றத்தின் வெளியே அருண் காத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தது. அனைத்து வழக்குகளும் முடிந்த நிலையில் இறுதியாக சுமார் 6 மணி நேரத்திற்கு பின் இந்த வழக்கு மீண்டும் மாலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஜான் சத்யன், எல்லா குண்டர் சட்டமும் உரிய விசாரணைக்கு பிறகே போடப்படுகிறது. குற்றம் சட்டப்பட்டவர் மீது பல வழக்குகள் இருந்ததால் குண்டர் சட்டம் போடப்பட்டது. அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, தனது 28 ஆண்டுகால காவலர் பணியில் எந்த சூழ்நிலையிலும் குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்தியது இல்லை என அருண் ஐபிஎஸ் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், குண்டர் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டதா? இல்லையா? என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும் எனக்கூறி வழக்கின் தீர்ப்பை மே 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.