தா.பழூர் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் முற்றுகை போராட்டம்
இன்று காலை வழக்கம்போல் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகிறது.

Published : May 28, 2026 at 4:53 PM IST
அரியலூர்: பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி தா.பழூர் சுத்தமல்லி சாலையில் இயங்கி வரும் அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டதோடு, கடைக்கு மதுபானத்தை இறக்க வந்த லாரியையும் பொதுமக்கள் விரட்டியடித்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் 100 மீட்டருக்கும் குறைவான தொலைவில் அரசு மாணவியர் விடுதி, அரசு மேல்நிலைப்பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் கோயில் போன்ற வழிபாட்டு தலங்கள் உள்ளன.
ஆகையால், இந்த கடையை மூட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூகநல ஆர்வலர் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அதிகாரிகள் இதைக் கண்டுக்கொள்ளவில்லை.
இந்த சூழலிலேயே, புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற விஜய் தலைமையிலான தவெக அரசு, பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் செயல்படும் 717 டாஸ்மாக் கடைகளுக்கு மூடப்படும் செய்யப்படும் என அறிவித்தது. இந்த 717 டாஸ்மாக் கடைகளில், பிரச்சனைக்குரிய இந்த டாஸ்மாக் கடையும் ஒன்றாகும்.
ஆகையால், இப்போது இந்த கடையின் செயல்பாட்டுக்கு கூடுதல் எதிர்ப்பு அப்பகுதி மக்களிடம் நிலவி வருகிறது. இந்த நிலையில், நேற்று (மே 27) இரவு சுமார் 7.30 மணியளவில் கடைக்கு முன் திரண்ட பொதுமக்கள், டாஸ்மாக் கடையை இன்றைக்குள் (மே 28) மூட வேண்டும் என தெரிவித்து திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
| இதையும் படிங்க: ‘நீ நல்லா சாப்பிட்டு இருக்க, நான் இன்னும் சாப்பிடல’ - பேருந்து நிலையத்தில் அமைச்சரின் பதிலால் முகம் சுளித்த பயணிகள் |
மேலும், நேற்றிரவு மதுபானங்களை டாஸ்மாக் கடையில் இறக்குவதற்கு வந்த லாரியை தடுத்து நிறுத்தி மதுபானங்களை இறக்கவிடாமல் விரட்டியடித்தனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த திடீர் டாஸ்மாக் கடை முற்றுகை போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக் கொண்டனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார், போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரச்சினைக்குரிய டாஸ்மாக் கடையை இன்றுடன் மூடிவிடுவதாகவும் அவர்கள் வாக்குறுதி தந்துள்ளனர். ஆனால், இன்று காலை வழக்கம்போல் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு, மது விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது.

