ETV Bharat / state

காட்டுப் பகுதியில் ஆண் சடலம்... பீதியில் கிராம மக்கள்... வனத்துறை முக்கிய அறிவிப்பு

பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே மரணம் குறித்த காரணம் உறுதி செய்யப்படும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 24, 2026 at 7:03 PM IST

1 Min Read
Choose ETV Bharat

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே புலி தாக்கி 57 வயது நபர் உயிரிழந்ததாக வெளியான தகவல் மலைப் பகுதி கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே சின்ன காடி மந்து கிராமம் உள்ளது. இந்த பகுதியில் தோடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதியைச் சேர்ந்த புஷ்தேல் குட்டன் (57) என்பவர் இன்று அங்குள்ள காட்டுப் பகுதிக்குள் சடலமாக கிடந்துள்ளார். மேலும், அவரது உடலின் பல பகுதிகளை வன விலங்குகள் உண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதால், அவரை புலி தாக்கி கொன்று இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

காட்டுக்குள் புஷ்தேல் குட்டனின் உடலை கண்ட பொதுமக்கள் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் அளித்து உள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தமிழ்நாடு வனத் துறை அதிகாரிகள், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையிலும், புஷ்தேல் குட்டன் காட்டுப் பகுதிக்குள் சென்ற போது புலி தாக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே மரணம் குறித்த உண்மையான காரணம் தெரிய வரும் என வனத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில், குறிப்பாக உதகை சுற்று வட்டார கிராமங்களில் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது.

இதையடுத்து, காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் தேவையின்றி செல்ல வேண்டாம் என்றும், இரவு நேரங்களில் தனியாக நடமாட வேண்டாம் என்றும் வனத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக, புலி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் கண்டறியப்பட்டால், உடனடியாக வனத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், தன்னிச்சையாக வன விலங்குகளை விரட்ட முற்படக் கூடாது எனவும் பொதுமக்களுக்கு வனத் துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

மேலும், உயிரிழந்த புஷ்தேல் குட்டனின் உடல் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

1. வாலாஜாபாத் அருகே மணல் கடத்தல் புகார்... அதிகாரிகளின் முரண்பட்ட விளக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி

2. தண்ணீர் இல்லாமல் நடக்கும் தெப்பத் திருவிழா - கூடலழகர் கோயிலுக்கு விடிவு காலம் எப்போது?