ETV Bharat / state

வாலாஜாபாத் அருகே மணல் கடத்தல் புகார்... அதிகாரிகளின் முரண்பட்ட விளக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி

மணல் கடத்தலுக்கு பின்னால் தொழிலதிபர் ஒருவர் இருப்பதாக ஊத்துக்காடு ஊராட்சி பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மணல் அள்ளப்பட்ட இடம்
மணல் அள்ளப்பட்ட இடம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 24, 2026 at 5:42 PM IST

2 Min Read
Choose ETV Bharat

காஞ்சிபுரம்: ஊத்துக்காடு கிராமத்தில் மணல் கடத்தல் நடைபெற்றதாக எழுந்த புகாரில், வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் முரண்பட்ட தகவல் அளித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி மற்றும் சந்தேகம் நிலவுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துக்காடு எனும் கிராமம் உள்ளது. இங்கு ஜே.எஸ். நகர் பின்புறம், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் பைபாஸ் சாலையையொட்டி, பல ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் தனி நபருக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன.

இந்த நிலப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மர்ம நபர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆங்காங்கே பள்ளம் தோண்டி மண் எடுத்து லாரிகள் மூலம் பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்து வருவதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், வாலாஜாபாத் போலீசார், மண் கடத்தல் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வாலாஜாபாத் – ஒரகடம் சாலையில் உரிமம் மற்றும் அனுமதியின்றி மண் எடுத்து சென்றதாக, லாரி ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரியை ஓட்டி வந்த வாலாஜாபாத் சின்னசாமி நகரைச் சேர்ந்த அர்ஜுனன் (52) என்பவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், சில மாதங்களாக இந்த பகுதியில் உள்ளூர் நபர்கள் சிலரது உடந்தையுடன் தொடர்ந்து மண் கடத்தல் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இந்த மணல் கடத்தலுக்கு பின்னால் தொழிலதிபர் ஒருவர் இருப்பதாகவும் ஊத்துக்காடு ஊராட்சி பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக வாலாஜாபாத் வட்டாட்சியர் இந்துமதியை தொடர்பு கொண்டு கேட்ட போது, மணல் கடத்தல் குறித்த புகாரில் விசாரணை நடைபெற்று வருகிறது. லாரியில் கொண்டு செல்லப்பட்ட மணல், குறிப்பிட்ட ஒருவருக்கு சொந்தமான தனியார் நிலத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகவும், அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது இல்லை என்பதற்கான ஆவணங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால், இது குறித்து வாலாஜாபாத் காவல் துறையினரிடம் கேட்ட போது, '' மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கண்காணிப்பு மேற்கொண்டோம். சந்தேகத்திற்கிடமாக வந்த லாரியை நிறுத்தி விசாரித்த போது மண் ஏற்றிச் செல்ல தேவையான எந்த ஆவணங்களோ அல்லது ரசீதுகளோ ஓட்டுநரிடம் இல்லை. இதனால் சட்டவிரோத மணல் கடத்தல் என தெரிய வந்தது. இதனால் லாரி ஓட்டுநரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தோம்'' என விளக்கம் அளித்தனர்.

இவ்வாறு இரு தரப்பில் இருந்து முரண்பட்ட விளக்கம் தெரிவிப்பதால் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் வலுத்துள்ளது. மேலும், தனியார் நிலமாக இருந்தாலும் அங்கு 10 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி, பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளி லாரியில் கொண்டு சென்று விற்பனை செய்ய யார் அனுமதி வழங்கியது? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், இது குறித்து முறையான விசாரணை நடத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: ரயில் சேவை ரத்தால் ஸ்தம்பித்த தாம்பரம் பேருந்து நிலையம்; 45 நாளும் இதே நிலைமை தானா?