ETV Bharat / state

நேற்று கைதி... இன்று கல்லூரி முதல்வர்; அவதூறு புகாரியில் சிக்கிய கல்லூரி முதல்வருக்கு எதிராக தொடரும் போராட்டம்

மாணவி தொடர்பாக அவதூறு கருத்து பதிவிட்டதற்காக கல்லூரி முதல்வர் மற்றும் அவரது கணவரை சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி முதல்வர் சுமிதா
நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி முதல்வர் சுமிதா (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 7, 2026 at 10:37 PM IST

1 Min Read
Choose ETV Bharat

நெல்லை: மாணவி ஒருவரை பற்றி அவதூறு கருத்து பதிவிட்டதற்காக நேற்று கைது செய்யப்பட்ட கல்லூரி முதல்வர், இன்று அதே கல்லூரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றதை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி பழைய பேட்டையில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராணி அண்ணா மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 4000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு தமிழ் படிக்கும் மாணவி ஒருவர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மாணவி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மாதம் 16-ஆம் தேதி மாணவி மனு அளித்திருந்தார். அதில் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவராக இருந்த சுமிதாவின் (தற்போது கல்லூரி முதல்வர்) வலைதள முகவரியில் இருந்தே சமூக வலைதள பக்கத்தில் அவதூறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக அவர் கூறியிருந்தார்.

இது தொடர்பாக டிசம்பர் 17ஆம் தேதி மாணவிக்கு ஆதரவாக இந்திய வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனிடையே மாணவியின் புகார் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். கடந்த 20 நாட்களாக விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று கல்லூரி முதல்வர் சுமிதாவும் அவரது கணவர் பொன்னுத்துரையும் மாணவி குறித்து அவதூறு மற்றும் ஆபாச கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பியது தெரியவந்தது. இதனை எடுத்து அவர்கள் இருவரும் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவருமே இரவோடு இரவாக பிணையில் வெளியே வந்தனர்.

இந்த நிலையில் இன்று கல்லூரி வளாகத்தில் மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழாவில் கல்லூரி முதல்வர் சுமிதா பங்கேற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி, வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.