ETV Bharat / state

தேர்தல் ஆணையருக்கு எதிராக சென்னையில் போராட்டம்: குண்டுகட்டாக கைது செய்த காவல்துறை

சென்னை சிம்சன் பகுதியிலும் இந்திய மாணவர் அமைப்பினர் ஞானேஷ்குமாரை பதவி விலக வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்டு சமூக நலக்கூடத்தில் அடைக்கப்பட்ட போராட்டக்காரர்கள்
கைது செய்யப்பட்டு சமூக நலக்கூடத்தில் அடைக்கப்பட்ட போராட்டக்காரர்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : October 10, 2026 at 8:16 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி விலக வலியுறுத்தி சென்னை, பெசன்ட்நகர் எலியட் கடற்கரையில் மாணவர் அமைப்பு சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

எஸ்.ஐ.ஆர் சிறப்பு தீவிர திருத்தத்தில் 13 கோடி வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், வாக்காளர் நீக்கத்திற்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்தவகையில், சென்னையின் பெசன்ட்நகர் எலியட் கடற்கரையிலும் இன்று (அக்டோபர் 10) மாணவர் அமைப்புக்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக நடைபெற்ற இந்த போராட்டத்தில், 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்
கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் (ETV Bharat Tamil Nadu)

ஞானேஷ்குமார் பதவி விலகும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்கிற கோஷங்களை எழுப்பி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களை கைது செய்யும் போலீசார்
போராட்டக்காரர்களை கைது செய்யும் போலீசார் (ETV Bharat Tamil Nadu)

அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்றதால், அங்கு போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பேசும்போது, "டெல்லியில் ஞானேஷ்குமாருக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், போராட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டிலிருந்து டெல்லிக்கு செல்ல முடியவில்லை. தமிழ்நாட்டு இளைஞர்களின் சார்பாக நடைபெற்ற எந்த விதமான அறவழிப் போராட்டமும் இந்திய வரலாற்றில் தோற்றதாக சரித்திரம் கிடையாது. ஆகையால் சென்னையில் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். மேலும், தவெக அரசின் கொள்கை எதிரியான பாஜகவை எதிர்த்துதான் நாங்கள் போராடுகிறோம்" எனத் தெரிவித்தனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து பெசன்ட் நகருக்கு அருகாமையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர்.

இந்த நிலையில், ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி சென்னை பெசண்ட் நகரில் போராடியவர்களுக்கு திமுக தலைவர்கள் நேரில் சென்று ஆதரவளித்தனர். மேலும் கைதானவர்களை விடுவிக்க கோரி காவல்துறையிடம் ஆ.ராசா உள்ளிட்ட திமுக தலைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. இருப்பினும், காவல்துறையினர் அவர்களை விடுவிக்க மறுத்த நிலையில், அதை கண்டித்து சமூதாய நலக்கூடத்திற்கு முன்பாக சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: தமிழக அமைச்சர்களின் செல்போன் எண்கள் வெளியீடு: பொதுமக்கள் நேரடியாக குறைகளை தெரிவிக்கலாம்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அ. ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், திமுக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆகியோரும் இந்த தர்ணாவில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதேபோன்று, சென்னை சிம்சன் பகுதியில் இந்திய மாணவர் அமைப்பினர் ஞானேஷ்குமாரை பதவி விலக வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு ஞானேஷ்குமாரை பதவி விலக வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.