ETV Bharat / state

பிரதமர் மோடி தமிழகம் வருகை: விமான நிலையத்தில் இபிஎஸ் உற்சாக வரவேற்பு

நாளை காலை 10:45 மணியளவில் சென்னை பழைய விமான நிலையத்திலிருந்து தனி விமான மூலம் பிரதமர் மோடி புதுச்சேரிக்கு புறப்பட்டு செல்கிறார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 28, 2026 at 10:41 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரு மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணையம் தேர்தல் ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, பிரதமர் மோடி பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குஜராத்தில் இருந்து தனி விமான மூலம் சென்னை வந்தடைந்தார்.

அவரை சென்னை விமான நிலையத்தில், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவின் முக்கிய பிரமுகர்களும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.

இதையடுத்து நாளை காலை 10:45 மணியளவில் சென்னை பழைய விமான நிலையத்திலிருந்து தனி விமான மூலம் புதுச்சேரிக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு நடைபெற இருக்கும் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, மூன்று மணியளவில் தனி விமான மூலம் மதுரை புறப்பட்டு செல்லும் பிரதமர் மோடி,
விமான நிலையத்தில் நடைபெற இருக்கும் அரசு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.

அதில் தமிழ்நாடு - கேரளா இணைக்கும் திருமங்கலம் -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை மக்கள் பயன்பாட்டிற்குப் திறந்து வைக்கிறார். மேலும் மதுரை விமான நிலைய விரிவாக்கத்தின் ஒரு பகுதியான வான் கட்டுப்பாட்டு அறை கட்டடத்தையும் திறந்து வைப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இருப்பதாகவும், அதனை தொடர்ந்து மதுரை மண்டேலா நகர் பகுதியில் 150 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமமுக டிடிவி தினகரன், பாமக அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்க உள்ளனர்.