ETV Bharat / state

ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் பாலமேடு - வாடிவாசல் அமைக்கும் பணிகள் தீவிரம்

பாலமேடு ஜல்லிக்கட்டிற்கான வாடிவாசல் மைதானம் தயாராகும் பணிகள் குறித்த கழுகு பார்வை வீடியோ வெளியாகியுள்ளது.

பாலமேடு வாடிவாசல் மைதானம்
பாலமேடு வாடிவாசல் மைதானம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 5, 2026 at 1:35 PM IST

1 Min Read
Choose ETV Bharat

மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள பாலமேட்டில் வரும் 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில், வாடிவாசல் மைதானத்தை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, தைத்திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டமே அதிரும் வகையில், அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஆகிய 3 ஊர்களில் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடம் வருகிற ஜனவரி 15 ஆம் தேதி அவனியாபுரம், 16-ம் தேதி பாலமேடு மற்றும் 17 ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுகள் நடைபெற உள்ளன. இந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. இதில், வாடிவாசல் மைதானம், பார்வையாளர்கள் மாடங்களுக்கு வண்ணம் பூசுதல், காளைகள் வரும் பகுதிகள் மற்றும் விளையாட்டு களமான மஞ்சமலை ஆற்றுத் திடலை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், பொதுமக்கள் வசதிக்காக இரண்டு அடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கு பணிகளும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து, ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசலுக்கு அழைத்து வரும் பகுதிகள் மற்றும் போட்டி நடக்கும் மைதானங்களில் பொக்கலைன் எந்திரங்கள் மூலம் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது இது குறித்த கழுகு பார்வை காட்சி வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் பாலமேடு (ETV Bharat Tamil Nadu)
இதையும் படிங்க: 'எங்க ஊரு கயிறு இல்லாம ஜல்லிக்கட்டு இல்லப்பே' - மதுரையில் களைகட்டிய மூக்கணாங்கயிறு விற்பனை!

முன்னதாக, போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கான முதற்கட்ட மருத்துவ சோதனைகள் அவனியாபுரத்தில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு எல்இடி திரை மூலம் ஸ்கோர் போர்டில் சுற்றுவாரியாக விவரங்கள் வெளியிடப்படும் எனவும், சிறந்த காளைகளுக்கான தேர்வு என்பது வருவாய்த் துறையினரே முடிவு செய்வார்கள் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டி அரசு விதிமுறைகள்

அதே போல், ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாவட்ட ஆட்சியா்களிடம் அனுமதி பெற வேண்டும். காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதையும், பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்வது அவசியம். போட்டி களத்திலிருந்து காளைகள் வெளியேறும் இடத்தில் கால்நடை மருத்துவக் குழுக்கள் தயாா் நிலையில் இருத்தல் அவசியம். தேவைப்படும் காளைகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை அவா்கள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.