ETV Bharat / state

''தமிழக முதல்வரால் காவிரி நதிநீர் உரிமை பறிபோய் விடுமோ? என்ற ஐயம் எழுகிறது'' - பி.ஆர்.பாண்டியன் கவலை!

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை முதலமைச்சர் கையில் கொடுத்துள்ளோம். முதலமைச்சர் பாதுகாக்க தவறி விடக்கூடாது என்பது எங்களுடைய எண்ணம் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

கூட்டத்தில் பேசிய பி.ஆர்.பாண்டியன்
கூட்டத்தில் பேசிய பி.ஆர்.பாண்டியன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : November 14, 2025 at 4:56 PM IST

3 Min Read
Choose ETV Bharat

கோயம்புத்தூர்: தமிழக முதல்வரால் காவிரி நதிநீர் உரிமை பறிபோய் விடுமோ? என்ற ஐயம் எழுகிறது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோவை கொடிசியாவில் வருகிற 19 ஆம் தேதி இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு மாநாடு டைபெற உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்க உள்ளார். இது குறித்து அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் என்னென்ன நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன? இதற்கான பொறுப்பாளர்கள் யார் யார்? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதன் பிறகு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ''மாநாட்டில் 50,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார். அன்றைய தினம் 10,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அந்த இடத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்த மாநாட்டில் தேசிய அளவிலான கொள்கை திட்டங்களை தீர்மானங்களாக நிறைவேற்றி பிரதமரிடம் வழங்க உள்ளோம். அதில் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் வேளாண் ஆர்வலர்கள் இணைந்து கொள்கை பிரகடனத்தை தயாரித்து வெளியிட உள்ளோம். மேலும், இதில் எந்த அரசியல் மாறுபட்ட கருத்துகளோ, அரசியல் காரணங்களோ கிடையாது. இது ஒட்டுமொத்தமாக விவசாயிகள் நலன் கருதி நடைபெறும் மாநாடு.

காவிரி நதி நீரில் நாம் பெற்ற உரிமை பறிபோய் விடுமோ என்று அஞ்சத் தோன்றுகிறது. நாடு முழுவதும் 6-க்கும் மேற்பட்ட நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டன. அதிலும் காவிரி நடுவர் மன்றம் தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு மத்திய அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி தொழில்நுட்ப குழு இரண்டும் உச்ச நீதிமன்றத்தின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி மேல்முறையீடு செய்வதற்கு கர்நாடக மாநிலமும், தமிழ்நாடு மாநிலமும் முன் வந்தன. உச்ச நீதிமன்றம் மேல்முறையீடு, மறு சீராய்வு மனு எதுவாயினும் உச்சநீதி மன்றத்தின் சம அதிகாரத்திற்கு உள்ள நடுவர் மன்றத்தில் தான் செயல்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தியது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையமும் ஜல்சக்தி துறையும் கர்நாடக அரசாங்கமும் கொடுத்த அந்த வரைவு திட்ட அறிக்கை அரசியல் சாசன விதிமுறைகளுக்கு புறம்பானது. எனவே ஆணையத்தின் மீது வழக்கு தொடர வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி உள்ளோம். தமிழக அரசு ஆணையத்தின் மீதும், ஜல்சக்தி துறையின் மீதும் வழக்கு தொடர மறுத்து கர்நாடக வரைவு திட்ட அறிக்கைக்கு எதிராக தொடர்ந்த வழக்கின் காரணமாக உச்சநீதிமன்றம் தற்போது புதிய வழிகாட்டுதலை கொடுத்திருக்கிறது. இது தமிழக அரசு பெற்ற உரிமைகள் பறிகொடுக்கும் நடவடிக்கைக்கு சமமானது.

கர்நாடக அரசின் முதலமைச்சர் பகிரங்கமாக அறிவிப்புகளை அறிவிக்கும் போது தமிழக முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும். நீர்ப்பாசன துறை அமைச்சரின் அறிவிப்பு முக்கியத்துவம் வேறு மாதிரி இருக்கிறது. முதலமைச்சர் கொடுக்கின்ற பதில் தேசிய அளவில் ஒரு பார்வையை உருவாக்கும். அது தான் இறுதியாகவும் இருக்கும். எனவே முதலமைச்சர் வாய் திறக்க மறுத்து தொடர்ந்து கர்நாடக அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு இசைவாக செயல்படுகிறாரோ என்று ஐயம் எழுகிறது.

இதையும் படிங்க: சென்னைக்கு ‘வாட்டர் மெட்ரோ’ - அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்த ‘கும்டா’

எனவே 50 ஆண்டு காலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் போராடி பெற்ற உரிமையை தமிழக அரசு பறி கொடுத்து விடுமோ என்ற ஐயம் எழுகிறது. அவ்வாறு நடந்தால் சென்னை உள்ளிட்ட 13 மாநகராட்சிகளை உள்ளடக்கிய ஐந்து கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் ஒட்டுமொத்தமாக பறிபோய்விடும். 22 லட்சம் ஏக்கர் விளைநிலம் பாலைவனமாக மாறும். தமிழகம் உணவு உற்பத்தியில் பின்னடைவை சந்திக்கும். எனவே தமிழக முதலமைச்சர் விரைந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தென்னிந்திய அளவிலான மாநாடு. எனவே ஒவ்வொரு மாநில முதலமைச்சர்கள், வேளாண்மை அமைச்சர்களை அழைக்கக்கூடாது என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. தேசிய அளவில் ஒரு கொள்கை பிரகடனத்தை ஏற்படுத்த வேண்டும். அதனை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் கொள்கை முடிவு எடுக்கின்ற அதிகாரம் மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் இருக்கிறது என்பதால் பிரதமரை மட்டும் தான் நாங்கள் அழைத்து உள்ளோம். அவர் மட்டும் தான் அந்த விழாவில் பங்கேற்க உள்ளார். அவர் முன்னிலையில் மத்திய அமைச்சரவை கூடி கொள்கை முடிவு எடுப்பதற்கான பரிந்துரைகளை மாநாட்டில் வழங்க இருக்கிறோம்'' என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.