ETV Bharat / state

பொங்கல் பரிசுத்தொகுப்பில் மண் அடுப்பு, பானை - கோரிக்கைக்கு செவிசாய்க்க தமிழக அரசுக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் வேண்டுகோள்

மண்பாண்டம் செய்யும் சக்கரம் இல்லாததால் தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்
மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 9, 2026 at 3:46 PM IST

2 Min Read
Choose ETV Bharat

திருவண்ணாமலை: நலிந்து வரும் மண்பாண்ட தொழிலை காக்க அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், ஏரியில் மண்ணை எடுக்க அனுமதிக்க அளிக்க வேண்டும் எனவும் மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின்போது மக்கள் தங்களது வீடுகளில் புதுப்பானை வைத்து பொங்கலிடுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது. தொழிலாளர்களும் காலத்திற்கு ஏற்றாற்போல், நவீன வடிவத்தில் பல்வேறு வகையான மண்பாண்ட பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி மண்பாண்ட கைவினை தொழிலாளர்கள் இரவு பகலாக மண்பானை, சட்டி, அடுப்பு தயாரிப்பு பணியில் மும்ரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன், சூளைமேடு, எஸ்.வி.நகரம், அழுகுசேனை, கண்ணமங்கலம், வண்ணாங்குளம், கீழ்வெள்ளம், அரையாளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தலைமுறை, தலைமுறையாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டில் பங்கேற்க அதிகரித்த ஆர்வம்: 15,000 காளைகள், 5,000 மாடுபிடி வீரர்கள் ஆன்லைனில் பதிவு

ஆனால், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ஏரியில் மண் எடுக்க அனுமதி வழங்க அரசு முன்வரவில்லை என்பதால், மண்ணை கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி பானையை சக்கரம் மூலம் மண் அமைத்து உருவெடுக்க முடியும். ஆனால், சரியான சக்கரமும் இல்லாததால் தங்களது தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்
மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் (ETV Bharat Tamil Nadu)

மேலும், நாகரிகம் என்ற பெயரில், மண் பானையில் பொங்கலிடும் பழக்கம் பொதுமக்கள் மத்தியில் குறைந்து வருவதாலும், கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யப்படும் பானைக்கு உரிய விலை கிடைக்காததாலும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தலைமுறை, தலைமுறையாக மண்பாண்ட தொழிலை செய்து வருவதால் தங்களது சந்ததியினர் முறையாக கல்வி கற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஏராளமானோர் மாற்று தொழில்களை நாடி சென்றுக் கொண்டிருக்கின்றனர். எனவே, மண்பாண்ட தொழிலை காக்க தமிழக அரசு முன்வந்து பானை செய்யும் சக்கரம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஏரியில் இலவசமாக மண் அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்கள் நலவாரியம் அமைக்க ஆவன வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

முன்னதாக, மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வில் ஒளியேற்றும் வகையில், பொங்கல் நாளில் ஒரு அடுப்பும், ஒரு பானையும் கொள்முதல் செய்து பொங்கல் பரிசுத் தொகுப்பில் இணைக்க வேண்டும் எனவும், மண்பாண்ட தொழிலை ஊக்குவிப்பதற்கு தமிழ்நாடு அரசு மண் எடுக்கும் அனுமதியை எளிமைப்படுத்தி மானியத்துடன் கடன் உதவிகள் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு இந்தத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.