ETV Bharat / state

நெல்லையில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதாக ஒட்டப்பட்ட போஸ்டர் - கடும் அதிருப்தியில் கூட்டணி கட்சிகள்

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போதும் வேட்பாளர் பட்டியலே வெளியாகாத நிலையில் முதல் ஆளாக முந்திக்கொண்டு நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

நெல்லையில் ஒட்டப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் போஸ்டர்
நெல்லையில் ஒட்டப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் போஸ்டர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 28, 2026 at 4:18 PM IST

1 Min Read
Choose ETV Bharat

திருநெல்வேலி: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையே முடியாத நிலையில், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதாக மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு போன்ற பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. மறுபுறம், தேர்தல் ஆணையமும் தமிழகத்தின் நடைபெறவுள்ள தேர்தல் இந்தியாவுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்று கூறி, அதன்படி தேர்தல் ஏற்பாடுகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றன.

அதேபோல் தங்கள் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியிலும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இதுவரை தேர்தல் தேதியானது வெளியிடப்படாத நிலையில், வேட்பாளர்களை இன்னும் கட்சி தலைமைகள் இறுதி செய்யவில்லை.

இருப்பினும், பல இடங்களில் ஏற்கனவே தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ள பலர், எப்படியும் நமக்குத்தான் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தாமாகவே முந்திக்கொண்டு தங்களை வேட்பாளராக வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நெல்லை சட்டமன்ற தொகுதியில், ‘பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏவுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிப்பீர்’ என குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தர முதல்வர் உறுதி: செல்வப்பெருந்தகை தகவல்

அதில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், ஏ. சி சண்முகம், ஜான்பாண்டியன் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் அத்துடன் தாமரை சின்னமும் இடம்பெற்றுள்ளது. நெல்லை மாநகர் பகுதி முழுவதும் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அதே சமயம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையே இன்னும் முடிவடையாத நிலையில், எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் நெல்லை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக நயினார் நாகேந்திரன் தேர்தலில் போட்டியிடுவதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

எனினும், கட்சித் தலைமையை கேட்காமல் தாமாக முந்திக் கொள்வது நயினார் நாகேந்திரனுக்கு இது புதிதல்ல; ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போதும் வேட்பாளர் பட்டியலே வெளியாகாத நிலையில் முதல் ஆளாக முந்திக்கொண்டு நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.