பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா: அரசு அதிகாரிகளை கடிந்து கொண்ட கம்பம் எம்எல்ஏ
விழாவிற்கு சரிவர ஏற்பாடுகள் செய்யாதது அதிகாரிகளின் அலட்சிய போக்கை காட்டுவதாக கூறி அவர்களை எம்.எல்.ஏ கடுமையாக கடிந்து கொண்டார்.

Published : January 8, 2026 at 7:42 PM IST
தேனி: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா ஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் சரிவர செய்யவில்லை எனக் கூறி, கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் கடிந்து கொண்டார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆலந்தூரில் இன்று துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நியாயவிலை கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் உள்ள கம்பம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் கூட்டுறவு பணியாளர்கள் நகர் பகுதியில் ஒரு தனியார் மண்டபத்தில் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த விழாவிற்கு தலைமை தாங்கி தொடங்கி வைப்பதற்காக கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் விழா கூட்டரங்கிற்கு வருகை தந்தார். அப்போது விழா கூட்டரங்கில் பயனாளர்கள், பொதுமக்கள் என யாரும் வருகை தராமல் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. அதனைப் பார்த்த எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் அதிருப்தி அடைந்தார். பின்னர், அதிகாரிகளை அழைத்து விழாவிற்கு உரிய முறையில் ஏற்பாடுகள் செய்யவில்லை என்றும் பயனாளர்கள் கூட வருகை தராமல் உரிய நேரத்தில் விழாவை ஆரம்பிப்பதாக கூறியது அதிகாரிகளின் அலட்சிய போக்கை காட்டுவதாக கூறி அவர்களை கடுமையாக கடிந்து கொண்டார்.
| இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் மூதாட்டிக்கு மாரடைப்பு: சமயோஜிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய நடத்துனருக்கு குவியும் பாராட்டு |
அப்போது அதனைப் பார்த்த அருகில் இருந்த தி.மு.க நிர்வாகிகள் அரசு விழா என்பதால் எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும், அப்படி தெரிவித்திருந்தால் முன்னேற்பாடுகளை் நாங்களே செய்திருப்போம் என்றும் கூறி அதிகாரிகளிடம் கேள்வியை எழுப்பினார்கள். அதனைத் தொடர்ந்து அவர்களே வந்து விழாவினை நடத்துவதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு விரைந்து பயனாளிகளை அழைத்து வந்து விழாவினை நடத்தி பொங்கல் பரிசுத் தொகுப்பினை கொடுத்துவிட்டு சென்றனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழாவிற்கு அரசு அதிகாரிகள் உரிய முறையில் முன்னேற்பாட்டு பணிகளை செய்யவில்லை எனக் கூறி கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் அரசு விழாவில் அதிகாரிகளை கடிந்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

