அறிவாலயத்தில் குவிந்த தொண்டர்கள்; வாழ்த்து மழையில் முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், பிரதமர் மோடி, பல்வேறு மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Published : March 1, 2026 at 11:14 AM IST
சென்னை: பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின், மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 73 வது பிறந்த நாளை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், 'மக்கள் முதல்வரின் மனிதநேய விழா' என்ற வாசகம் கருணாநிதி நினைவிடத்தில் எழுதப்பட்டு இருந்தது. இருவருடைய நினைவிடத்திலும் தமிழ்நாடு முதலமைச்சர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பிறந்த நாளை ஒட்டி அரிசி மூட்டை, வேஷ்டி, சட்டை, புடவை ரொக்க பணம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள கருணாநிதி புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார், அதனை தொடர்ந்து முதலமைச்சர் தனது தாயார் தயாளுவிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் திமுக முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு,துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், மூர்த்தி, நாசர், சாமிநாதன், டி.ஆர்.பி.ராஜா, பெரியசாமி உள்ளிட்ட பல அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் கலாநிதி வீராசாமி, மேயர் பிரியா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அண்ணா நினைவிடத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது; "ஓ.பன்னீர் செல்வம் வருகை என்பது திமுகவின் தென் மாவட்டத்திற்கு கூடுதல் பலம் தான். அவருக்கு அங்கு நல்ல பெயர் உள்ளது. அதிமுக அழிவு பாதையில் போய்க் கொண்டுள்ளது. பெரியார் புகைப்படத்தை அகற்றிய செயலின் மூலம் அதிமுக சுயமரியாதையை இழந்துள்ளது. பிரதமர் மோடியின் வருகை தமிழ்நாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது, வடமாநில அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது" என்றார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், பிரதமர் மோடி, பல்வேறு மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அண்ணா அறிவலாயத்தில் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

