ETV Bharat / state

தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசப்பட்டதாக புகார்: செந்தில் பாலாஜி வீட்டிற்கு பறந்த சம்மன்

சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்க ரூ.35 கோடி கொடுப்பதாக தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய விவகாரத்தில், கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரரை போலீசார் தேடி வருகின்றனர்.

செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் சம்மன் வழங்கிய போலீஸ்
செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் சம்மன் வழங்கிய போலீஸ் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 4, 2026 at 4:35 PM IST

2 Min Read
Choose ETV Bharat

கரூர்: தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஜராகக்கோரி அவரது கரூர் வீட்டில் திருவேல்லிகேணி போலீஸ் சம்மன் வழங்கியுள்ளனர்.

தவெக ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இளையராஜா, சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், சென்னையை சேர்ந்த திருநாவுக்கரசு தன்னை தொடர்பு கொண்டு சட்டப்பேரவையில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாகவும், வாக்கெடுப்பின் போது அவருக்கு எதிராக வாக்களிக்க சன்மானமாக ரூபாய் 35 கோடி தருவதாகவும் தெரிவித்தனர். மேலும் அதற்கு நான் மறுப்பு தெரிவித்த நிலையில், நானும் எனது குடும்பத்தினரும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியதாக தெரிவித்தார்.

இந்த புகாரின் பேரில், IPDS எனும் ’இந்தியன் பொலிட்டிக்கல் டெமாக்ரடிக் சீக்ரெட்டிஸ்’ என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தை நடத்தி வந்த திருநாவுக்கரசு, திருச்சியை சேர்ந்த நரேஷ், மற்றும் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகிய மூன்று பேரை திருவல்லிக்கேணி போலீசார், வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து திமுக எம்ஏல்.ஏ செந்தில் பாலாஜியின் நண்பர்களான சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி, பங்குதாரர் ரமேஷ் ஆகியோரையும் கடந்த ஜூலை 1ஆம் தேதி திருவல்லிக்கேணி போலீஸ் கரூரில் கைது செய்தனர். இதனால் இந்த வழக்கில் கைது எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னை, பள்ளிக்கரணையை சேர்ந்த செல்வம், மணப்பாக்கம் சீனிவாசன், கஷ்டிணபுரம் ராஜேஷ் ஆகியோரையும் போலீசார் கைது செய்ததை தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8-ஆக உள்ளது.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சரும், கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரை தற்போது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேடி வருகின்றனர். இந்நிலையில், செந்தில் பாலாஜி, மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளதால், திருவல்லிக்கேணி போலீசார் தனிப்படை அமைத்து தமிழ்நாடு மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தேடி வருகின்றனர்.

இதனிடையே கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், செந்தில் பாலாஜியின் சகோதரரான எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு இந்த வழக்கில் காவல்துறை தன்னை தொடர்புப்படுத்தி தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே வரும் ஜூலை 6-ஆம் தேதி திங்கட்கிழமை, பிற்பகல் 12 மணிக்கு செந்தில் பாலாஜி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என கரூர், ராமேஸ்வரபட்டியில் உள்ள அவரது வீட்டில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன் சம்மன் வழங்குவதற்காக வருகை தந்திருந்தார்.

இதையும் படிங்க: தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய விவகாரம் - கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்; செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு வலைவீச்சு

அப்போது, செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்குமாரும் இல்லாததால் அவரது பெற்றோரிடம் சம்மனில் உள்ள விவரங்களை தெரிவித்து, காவல் உதவி ஆய்வாளர் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் வருகை தர உள்ள நிலையில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரை கைது செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.