ETV Bharat / state

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசியதாக வழக்கு: சிங்கப்பூரிலிருந்து தொடர்பு கொண்டது யார்? போலீசார் தீவிர விசாரணை

சிங்கப்பூரிலிருந்து பேசிய நபர் யார்? எந்த நோக்கத்திற்காக அந்த நபரிடம் பேசப்பட்டது? இந்த சதி திட்டத்தில் அவருக்கு தொடர்பு இருக்கிறதா? என பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவல்லிக்கேணி காவல் நிலையம்
திருவல்லிக்கேணி காவல் நிலையம் (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 8, 2026 at 3:05 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தீவிரம் காட்டிவரும் நிலையில், சிறையில் உள்ள ஒருவரிடம் சிங்கப்பூரிலிருந்து பேசியது யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி தவெக எம்.எல்.ஏ டாக்டர் என்.இளையராஜாவை சென்னையில் தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்திய வரும் திருநாவுக்கரசு என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது தாங்கள் கூறும் வகையில் செயல்பட்டால் ரூபாய் 35 கோடி வழங்கப்படும் என பேரம் பேசியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் தமக்கு மிரட்டல் விடுத்ததாகவும் இளையராஜா பகிரங்கமாக கூறினார்.

இந்த சம்பவத்தை அடுத்து எம்.எல்ஏ. இளையராஜா இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, இதுவரை 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

விசாரணையின்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் இச்சம்பவம் நடைபெற்றதாக கைது செய்யப்பட்ட சிலர் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனை அடுத்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இருவரும் ஜூலை 6 அன்று, காவல் நிலையத்தில் நேரடியாக ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென போலீசார் தரப்பில் சம்மன் வழங்கப்பட்ட நிலையிலும் அவர்கள் இருவரும் ஆஜராகாமல் முன் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் ஆர்.டி.ஓ-வின் புதிய ‘H’ வடிவ ஓடுதளத்தால் சர்ச்சை; ஓட்டுநர் உரிமம் பெற முடியாமல் மக்கள் அவதி

மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் கிண்டி பகுதிகளில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்கி எம்.எல்.ஏவிடம் பேரம் பேசுவதற்கு திட்டமிட்டதும் தெரியவந்தது. இந்த விவகாரத்தின் பின்னணியில் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தொடர்பில் இருப்பதும், சுமார் 180 கோடி ரூபாய் வரை இதற்காக ஒதுக்கப்பட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதில் கைது செய்யப்பட்டுள்ள நரேஷ் என்பவரின் இல்லத்தில் தனிப்படை சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதன் மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.

இந்நிலையில் அவர்களிடம் ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணையில் ஆவணங்கள் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு மர்ம நபர் ஒருவரிடம் தொலைபேசியில் தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசியிருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் அந்த நபர் யார்? எந்த நோக்கத்திற்காக அந்த நபரிடம் பேசப்பட்டது? இந்த சதி திட்டத்தில் அவருக்கு தொடர்பு இருக்கிறதா? என பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இவர்களை காவலில் எடுத்து விசாரணை செய்தால் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.