ETV Bharat / state

‘தாய் கைகட்டி நின்றதால் மன உளைச்சல்’ - மதுரை அரசுப் பள்ளி மாணவி விபரீத முடிவு: தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு

மாணவியின் தாயார் அளித்த புகாரில், தலைமையாசிரியை சாதிய ரீதியாக இழிவுபடுத்தியதாகவும், தனது தாயார் பிறர் முன்னிலையில் கை கட்டி நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டதை பார்த்து மாணவி வேதனை அடைந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி உசிலம்பட்டி
அரசுப் பள்ளி உசிலம்பட்டி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 31, 2026 at 8:18 AM IST

2 Min Read
Choose ETV Bharat

மதுரை: உசிலம்பட்டி அருகே அரசுப் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியை மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள், 10ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, பூச்சிப்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு சேர்ந்துள்ளார். சில நாட்கள் மட்டுமே பள்ளிக்கு சென்ற மாணவி, அதன் பின்னர் பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து பள்ளி நிர்வாகம் மாணவியின் பெற்றோரை அழைத்து, மாற்றுச் சான்றிதழை பெற்று, வேறு பள்ளியில் சேர்க்குமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து மாணவியை உசிலம்பட்டி அரசு பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக, ஆலோசனை பெறுவதற்கு மாணவியும் அவரது தாயாரும் பள்ளிக்குச் சென்றுள்ளனர். அப்போது தலைமை ஆசிரியையிடம் மாணவியின் தாயார் பேசிக் கொண்டிருந்த நிலையில், அவர் கை கட்டியபடி நின்றதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த மாணவி, தனது தாயின் கையைத் தட்டிவிட்டு, “கை கட்டி நிற்க வேண்டாம்” எனக் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தலைமையாசிரியை கோபமடைந்து, “உங்கள் அம்மா கை கட்டி பதில் சொன்னால் உனக்கு என்ன?” என மாணவியைப் பார்த்து கோபமாக பேசியதாக அவரது தாயார் போலீசில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், “இப்போது என்னிடம் இவ்வளவு திமிராக நடந்து கொள்கிறாய். மற்ற பள்ளிகளிலும் இப்படித்தான் நடந்திருப்பாய். அதனால்தான் உன்னை அந்த பள்ளியை விட்டு வெளியேற்றி உள்ளார்கள்” என தலைமையாசிரியை கூறியதாகவும், மாணவியை வெளியே செல்லுமாறு அதட்டியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

மன உளைச்சலான மாணவி

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி பள்ளியில் இருந்து வெளியே ஓடியதாகவும், பின்னர் நடந்தே நல்லமாள்பட்டி நோக்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. மகளைத் தேடி இருசக்கர வாகனத்தில் சென்ற தாயார், சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் மாணவி தனியாக நடந்து செல்வதை பார்த்து, ஆட்டோவில் அவரை அழைத்து வீட்டிற்கு அழைத்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அன்று இரவு மாணவி உணவு சாப்பிடாமல் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். மறுநாள் ஏற்கனவே படித்த அரசுப் பள்ளிக்கு சென்ற மாணவி, அங்கிருந்து தனது மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொண்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர் அன்று மாணவி தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

மாணவி உயிரிழந்தது தொடர்பாக உசிலம்பட்டி தாலுகா போலீசார் முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாணவியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், தனது மகள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தலைமையாசிரியை சாதிய ரீதியாக இழிவுபடுத்தியதாகவும், தனது தாயார் பிறர் முன்னிலையில் கை கட்டி நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டதை பார்த்து மாணவி வேதனை அடைந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரையில் ரோந்து வரும் 'சைக்கிள் போலீஸ்'; சுழலும் சைரனுடன் 'மாஸ் என்ட்ரி' - என்ன விசேஷம்?

மேலும் தலைமையாசிரியை பேசிய விதத்தால் அவமானமும், மன உளைச்சலும் ஏற்பட்டதாகவும் பெற்றோர் புகாரில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அரசு பள்ளி தலைமையாசிரியை விமலாதேவி மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

’தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல’

வாழ்வதற்கு புது நம்பிக்கையைப் பெற தமிழ்நாடு அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-ஐ தொடர்பு கொண்டு பேசலாம்.

இதேபோல், சிநேகா தொண்டு நிறுவனத்தை +91 44 2464 0050, +91 44 2464 0060 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது help@snehaindia.org என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவிகளை பெறலாம். டாடா நிறுவனத்தின் 91529 87821 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம்.