ETV Bharat / state

ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் நடுரோட்டில் அட்டகாசம்: விசிக மா.செ உள்ளிட்ட 102 பேர் மீது வழக்குப் பதிவு

திருச்செந்தூர் விசிக மாவட்ட செயலாளர் விடுதலைச் செழியன், தூத்துக்குடி மண்டல செயலாளர் ராஜ்குமார் மற்றும் 50 பெண்கள் உள்ளிட்ட விசிக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஊர்வலமாக வந்த விசிகவினர்
ஊர்வலமாக வந்த விசிகவினர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 11, 2026 at 11:06 AM IST

1 Min Read
Choose ETV Bharat

தூத்துக்குடி: திருச்செந்தூரில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் இடையூறு செய்ததாக, விசிக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 102 நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தூத்துக்குடி மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பல்வேறு தொகுதிகளை மாவட்டங்களாகப் பிரித்து புதிய பொறுப்பாளர்களை விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார்.

இதில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதியினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தனி மாவட்டமாக பிரித்து, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்த விடுதலைச் செழியனை திருச்செந்தூர் மாவட்டச் செயலாளராக அறிவித்தார்.

மேலும், திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார் என்பவருக்கு தூத்துக்குடி மண்டல செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, விசிகவில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ள இருவரும் நேற்று (ஜன.10) திருச்செந்தூரிலுள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அப்போது, திருச்செந்தூர் - திருநெல்வேலி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை திடலிலிருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட கட்சியினருடன் தாரை தப்பட்டைகள் முழங்கப் பேரணியாக வந்தனர். மேலும் 30-க்கு மேற்பட்டோர் ஆட்டோக்களில், கட்சிக் கொடிகளை கட்டி பேரணியாக வந்தனர். அதுமட்டுமின்றி, கட்சியினர் சொகுசு காரின் முன்பக்கத்தில் 2 புதிய பொறுப்பாளர்களையும் அமரவைத்து ரதவீதி வழியே ஊர்வலமாக அழைத்து சென்றனர். இந்த செயலால் திருச்செந்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்
போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் (ETV Bharat Tamil Nadu)
இதையும் படிங்க: பொங்கல் சிறப்பு மாட்டுச் சந்தை; ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனையால் விவசாயிகள் மகிழ்ச்சி

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேரணியாக வந்த ஆட்டோக்களையும், கட்சியினரையும் புகைப்படம் எடுத்ததால் விசிகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ்க்கும் விசிக நிர்வாகிகள் வழிவிடவில்லை என்று கூறப்படுகிறது.

பொறுப்பு வந்ததும் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் சாலையில் அட்டகாசம் செய்த விசிகவினர் (ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொதுமக்களை அச்சுறுத்தும்படி கோஷமிட்டது, அனுமதியின்றி வாகனங்களில் பேரணி மேற்கொண்டது என விசிக திருச்செந்தூர் மாவட்ட செயலாளர் விடுதலைச் செழியன், தூத்துக்குடி மண்டல செயலாளர் ராஜ்குமார் மற்றும் 50 பெண்கள் உள்பட 102 பேர் மீதும், 17 ஆட்டோக்கள் மற்றும் 2 கார் மீதும் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.