ஆகாஷை கொலை செய்யும் நோக்கத்திலேயே காவலர்கள் தாக்கியுள்ளனர்: குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்
"தனது மகனின் மரணத்துக்கு காரணமான அனைத்து காவலர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்" என ஆகாஷின் தாயார் ஆனந்தி வலியுறுத்தியுள்ளார்.

Published : August 27, 2026 at 10:59 PM IST
சிவகங்கை: மானாமதுரை இளைஞர் ஆகாஷை கொலைச் செய்யும் நோக்கத்தில் தான் காவலர்கள் தாக்கியுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகாஷ் மேம்பாலத்தில் இருந்து குதித்தாரா?
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரயில்வே காலனி பகுதியில் ஜீவா நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் ஆதனூரை சேர்ந்த அழகர் ஆகியோரை பட்டாகத்தி மற்றும் அரிவாளால் தாக்கிய சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் வந்தது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையின்போது, இந்த வழக்கில் தொடர்புடையதாக ஆகாஷ் டெலிசன் (வயது 26) என்ற பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரை மானாமதுரை போலீசார் பிடிக்க முயன்றதாகவும், அப்போது, ஆகாஷ் மேலமடை மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்றதாகவும், அதில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
மானாமதுரை டூ மதுரை
காயமடைந்த ஆகாஷ் டெலிசனுக்கு முதலில் மானாமதுரை அரசு மருத்துவமனையிலும், பின்னர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். நள்ளிரவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், அதையடுத்து, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், ஆகாஷ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.
காவல் சித்திரவதை
விசாரணையின்போது போலீசார் தாக்கி துன்புறுத்தியதால் தான் ஆகாஷ் டெலிசன் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனைத் தொடர்ந்து, மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் வழக்கறிஞர் ஹென்றி திபேன், "திருப்புவனம் அருகே மானாமதுரை காவல் நிலைய போலீசார் விசாரணையின்போது, 26 வயது பட்டியலின இளைஞர் ஆகாஷ் டெலிசன் அடித்து சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். அதன் விளைவாக அவர் இறந்துள்ளார்.
மார்ச் 7- ஆம் தேதி ரிமாண்ட் செய்யப்பட்ட அவர், 8- ஆம் தேதி காலையில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். எனவே, இந்த சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதலின்படி, பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்'" என வலியுறுத்தியிருந்தார்.
சிபிசிஐடிக்கு மாற்றம்
இதனிடையே ஆகாஷ் டெலிசன் மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அமர்வு தாமாக முன்வந்து விசாரித்தது. இந்த வழக்கில் ஆகாஷ் டெலிசன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கொலை மற்றும் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய நீதிபதி, கடந்த மார்ச் 13- ஆம் தேதி சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார்.
நீதி வேண்டும்
சிபிசிஐடி டி.எஸ்.பி ஷாய் தங்கம் தலைமையில் இன்ஸ்பெக்டர் சரவணகுமார், எஸ்.ஐ.கீதா, எஸ்.ஐ. சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆகாஷ் வழக்கை பல்வேறு கோணத்தில் விசாரித்தனர். இதற்கிடையே ஆகாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நீதி கிடைக்கும் வரை உடலை பெற மாட்டோம் என்று கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிபதியின் எச்சரிக்கை
ஜூன் 15 -ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆகாஷ் உடலை அன்று மாலை 05.00 மணிக்குள் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் போலீசாரே உடலை அடக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.
காவல்துறையின் இறுதிச் சடங்கு
அதன்படி ஜூன் 17- ஆம் தேதி காலை ஆகாஷ் டெலிசனின் உடலை காவல்துறையினர் எடுத்துச் செல்ல வந்தபோது குடும்பத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை கைது செய்து போலீசார் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் ஆகாஷ் டெலிசனின் உடல் மதுரை மாவட்டம், தத்தனேரி மின் மயானத்தில் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.
கொலை செய்யும் நோக்கம்
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிசிஐடி சார்பில் ஆகாஷ் வழக்கு குறித்த குற்றப்பத்திரிக்கை கடந்த ஜூன் 18- ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தாக்குதலில் ஈடுபட்ட 6 காவலர்களும் ஆகாஷ் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காவலர்கள் ஆகாஷை கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்கியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிக்கை நகலை பெறப் போராட்டம்
இதற்கிடையே ஆகாஷின் பெற்றோருக்கு குற்றப்பத்திரிக்கையின் நகல் சுமார் 66 நாட்களுக்குப் பிறகே வழங்கப்பட்டது. இந்த நகலை பெறுவதற்காக ஆகாஷின் குடும்பத்தினர் மாவட்ட அதிகாரிகளிடம் மனு அளித்ததுடன், பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
யூகலிப்டஸ் தோப்பில் தாக்குதல்
சிபிசிஐடி விசாரணையின்படி, கடந்த மார்ச் 06-ஆம் தேதி மாலை சுமார் 05.30 மணியளவில் ஆகாஷை காவல் வாகனத்தில் அழைத்துச் சென்ற காவலர்கள், மானாமதுரை அருகே யாரும் அதிகம் நடமாடாத, யூகலிப்டஸ் மரங்கள் நிறைந்த ஒதுக்குப்புறப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஆகாஷின் வலது முழங்காலுக்கு கீழும், கணுக்காலுக்கு மேலும் இரும்புக் கம்பியால் தாக்கியதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிசிஐடியின் அதிர்ச்சி குற்றச்சாட்டு
இந்த தாக்குதலில் ஆகாஷுக்கு பலத்த எலும்பு முறிவுகள் ஏற்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட கொழுப்பு இரத்தக்குழாய் அடைப்பு (Fat Embolism) காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் சிபிசிஐடி குறிப்பிட்டுள்ளது. தாக்குதலுக்குப் பின்னர் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பியை காவலர்கள் மறைத்து, ஆகாஷுக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து தவறான தகவலை உருவாக்கியதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
மகனின் இறுதி வார்த்தைகள்
ஆகாஷின் தாயார் ஆனந்தி, தனது மகன் இறப்பதற்கு முன்பு கூறியதாக தெரிவித்த வார்த்தைகள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. “அம்மா, அவர்கள் என்னை அடிக்கிறார்கள். வலிக்கிறது, அடிக்க வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவர்கள் நிறுத்தவில்லை. என் காலை உடைத்துவிட்டார்கள்” என்று ஆகாஷ் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
காவல்துறையின் முக்கிய குற்றவாளிகள்
மானாமதுரை அருகே பாலத்தில் இருந்து குதித்ததால் ஆகாஷுக்கு காயம் ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கு மாறாக காவலர்கள் தாக்கியதாலேயே அவருக்கு காயங்கள் ஏற்பட்டதாக சிபிசிஐடி குற்றப்பத்திரிகைக் கூறுகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஆய்வாளர் திலீபன் (வயது 39) சேர்க்கப்பட்டுள்ளார்.
அவருடன் சார்பு ஆய்வாளர் கே.குகன் (வயது 35), முதல்நிலை காவலர் எஸ்.காளேஸ்வரன் (வயது 37), ஓட்டுநர் காவலர் பி.மகேந்திரன் (வயது 33), காவலர் எல்.தேவேந்திரன் (வயது 38), காவலர் பி.பழனியப்பன் (வயது 40) ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியான ஆய்வாளர் திலீபன் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 103, 201, 238 ஆகிய பிரிவுகளின் கீழும், பட்டியலின மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் 3(2)(v) பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் கைது செய்யப்படவில்லை
குற்றம்சாட்டப்பட்ட மற்ற காவலர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 103 மற்றும் 238 ஆகிய பிரிவுகளுடன், எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் 3(2)(v) பிரிவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் காவலர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ள போதிலும், இதுவரை 6 காவலர்களும் கைது செய்யப்படாதது குறித்து ஆகாஷின் குடும்பத்தினரும் மனித உரிமை ஆர்வலர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆகாஷ் தாயாரின் குமுறல்
"என் மகனின் மரணத்துக்கு காரணமான அனைத்து காவலர்களையும் உடனடியாக கைது செய்து, அவருக்கு நீதி வழங்க வேண்டும்" என ஆகாஷின் தாயார் ஆனந்தி வலியுறுத்தியுள்ளார்.

