12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது
திருப்பத்தூரில் பல ஆண்டுகளாக போலி மருத்துவம் பார்த்த நபரை போலீசார் கைது செய்தனர்

Published : January 10, 2026 at 2:07 PM IST
திருப்பத்தூர்: 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூரை அடுத்த மிட்டூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக போலி மருத்துவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குநர் ஞானமீனாட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அவரது உத்தரவின் பேரில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சிவகுமார் தலைமையில் மருந்தாளுநர்கள் குரு ராகவேந்திரன் மற்றும் கார்த்திக் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் மிட்டூர் பகுதிக்குச் சென்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு சிங்காரம் (53) என்பவர் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு, நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. இதனால் மருத்துவக் குழுவினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர். அதனைத் தொடர்ந்து, அதே போல் அங்கிருந்து சில மீட்டர் தொலைவில் செல்வம் என்பவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். அவரை பிடிக்க சென்ற போது அதிகாரிகள் வருவதை கண்டதும் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

| இதையும் படிங்க: ’ஜனநாயகன்’ திரைப்படத்தை சென்சார் போர்டு மூலம் முடக்க மத்திய அரசு முயற்சி - நெல்லை முபாரக் |
பின்னர் மருத்துவ அலுவலர் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் குரிசிலாப்பட்டு போலீசார் சிங்காரம் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய போலி மருத்துவர் செல்வத்தை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும், சிங்காரம் நடத்தி வந்த கிளினிக்கில் இருந்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கிளினிக்கிற்கும் சீல் வைக்கப்பட்டது.

