மதுபோதையில் போலீசாரை அரிவாளை கொண்டு தாக்க முயற்சி - கோவில்பட்டியில் 7 இளைஞர்கள் கைது
மது போதையில் இருந்த இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் அரிவாளை கொண்டு போலீசாரை தாக்க முயற்சி செய்தது தெரியவந்துள்ளது.

Published : January 8, 2026 at 10:59 AM IST
தூத்துக்குடி: மதுபோதையில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 7 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இந்திரா நகர் பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் மருது பாண்டியன் (29) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரும், அவரது நண்பர்களும் இணைந்து மதுபானத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமில்லாமல் பிறந்தநாளுக்கு பட்டா கத்தியால் கேக் வெட்டி, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்களில் அவர்கள் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தகவலின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய உதவி ஆய்வாளர் வேல் பாண்டியன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது இளைஞர்கள் கும்பலாக பட்டா கத்தியுடன் கொண்டாட்டத்தில் இருந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர்.
மேலும், கோவில்பட்டி நடராஜபுரம் 1வது தெருவை சேர்ந்த ராமர் (19) என்பவர் அரிவாளை கொண்டு காவலர் வேல் பாண்டியனை தாக்க முயற்சி செய்துள்ளார். மேலும் போலீசாரை அவதூறாகப் பேசியது மட்டுமல்லாமல், தப்பியோடவும் முயன்றுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டது, காவலர்களை அரிவாளை கொண்டு தாக்க முயற்சி செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக மருதுபாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள் ராமர், பொன்பாண்டி (25), தினேஷ்குமார் (19) ராஜேஷ்குமார் (26), கார்த்திகேயன் (24), கவிபாரதி (19) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளைஞர்கள் இடையே நிலவி வரும் ரீல்ஸ் வீடியோ மோகத்தால் பிறந்தநாள் கொண்டாடும் போது அரிவாளை கொண்டு கேக் வெட்டுவதும், அதனை சமூக வலைதளங்களில் வெளியிடுவதும் வாடிக்கையாக உள்ளது. மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்தும், இதுபோன்ற சம்பவங்களில் இளைஞர்கள் ஈடுபடுவது வாடிக்கையாகி வருகிறது. இதை தடுக்கும் விதத்தில் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

