இளைஞர் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
இந்த கொலையில் தொடர்புடைய திருவிடைமருதூரை சேர்ந்த ஜீவகருணா என்பவர் தற்போது வரை தலைமறைவாக உள்ளார்.

Published : January 6, 2026 at 5:01 PM IST
தஞ்சாவூர்: இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணம் பாணாதுறை பத்துக்கட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் என்.கே.பி செந்தில் என்பவரிடம் வட்டிக் பணம் வாங்கியுள்ளார். இதனை திரும்பி தருவதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 2019ம் ஆண்டு செந்திலின் தம்பி என்.கே.பி பாலகுருவின் தூண்டுதலின் பேரில் வெங்கடேசன், சந்துரு (எ)சந்திரசேகரன், கதிர், ஜீவகருணா ஆகிய 4 பேரும் அரிவாளுடன் சிவசுப்பிரமணியன் மளிகை கடைக்குள் அதிரடியாக புகுந்து, அங்கிருந்த அவரது மகன் அருண் (எ) ஆகாஷை கத்தியால் வெட்டினர்.
இதனை தொடர்ந்து கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அருண் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கும்பகோணம் கிழக்கு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய என்கேபி பாலகுரு (60), கடன் வழங்கிய அவரது மூத்த சகோதரர் என்கேபி செந்தில் (65), வெங்கடேசன் (48), திருவிடைமருதூரை சேர்ந்த ஜீவகருணா (36), சந்துரு (எ) சந்திரசேகரன் (56) மற்றும் சோழபுரத்தை சேர்ந்த கதிரவன் ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கு கும்பகோணத்தில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இவ்வழக்கில், விசாரணை நிறைவு பெற்ற நிலையில் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ராதிகா இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், படுகொலைக்கு தூண்டுதலாக இருந்த என்கேபி பாலகுருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தும் உத்தரவிட்டார்.
மேலும், அவரது மூத்த சகோதரர் என்கேபி செந்தில் (இவர் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி) வெங்கடேசன் (இவரும் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ), திருவிடைமருதூரை சேர்ந்த சந்துரு (எ)சந்திரசேகரன், சோழபுரத்தை சேர்ந்த கதிரவன் (இவர் சோழபுரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ) ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையுடன் தலா ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் தொடர்புடைய திருவிடைமருதூரை சேர்ந்த ஜீவகருணா தற்போது வரை தலைமறைவு குற்றவாளியாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

